அவள் விகடன், 02.05.17
சரவணனுக்குத் தான்
முதலில் நன்றி சொல்ல வேண்டும். “வாங்க, புளியானூர் போகலாம்” என்று நெஞ்சில்
முதல் ஆசை விதையைத் தூவிய நண்பன் அவன். கூடவே மயில்சாமியும்! பள்ளிப்
பருவத்து நண்பர்கள்! கோடை வெயிலில் திருப்பத்தூர் எத்தனை குளுகுளு நகரமாக இருக்கும்
என்பதை உக்கிரமாக சூரியன் நிரூபித்துக் கொண்டிருந்த ஒரு நடுமதியம் காரில் புளியானூர்
குக்கூ மாற்றுப் பள்ளி நோக்கி பயணம் துவங்கியது. சிங்காரப்பேட்டை
பிரிவில் இருந்து, புளியானூர் வரை வழி எங்கும் மாந்தோப்பு. அடடா…வண்டியில்
ஒரு கோணிப்பை இல்லையே என்ற வருத்தம் மேலிட ஊரார் தோட்டத்து மாங்காய் புளிக்கும் என்று
மனதுக்குள் சொல்லிக்கொண்டே ஊரை அடைந்தோம்.
“இங்க குக்கூ
ஸ்கூலுக்கு எப்டிம்மா போகணும்?”, என்றதும் ஒரு அம்மா, குதூகலத்துடன்
வண்டியில் ஏறிக்கொண்டார். “புள்ளைங்க காலைல ஆறு மணிக்கெல்லாம் போய்ட்டாங்க…எனக்கு
இப்போ தான் வர முடிஞ்சிது” என்றபடி, “இந்த ரோடு கூட அவுக
போட்டது தான்”, என்று புன்னகையுடன் சொல்லிக்கொண்டு வந்தார். மண்சாலையில்
கார் தவழ்ந்து மெல்ல அடைந்த இடம்- ஒரு கிராமத்து திருவிழாவுக்கு உண்டான அத்தனை அழகியலையும்
கடை பரப்பி வைத்து இருந்தது. முதலில் கண்ணில் பட்டவர்கள்- குழந்தைகள். அடுத்து- குழந்தைகளாக
முழுக்க மாறி விட்டிருந்த பெரியவர்கள். ஐடியில் பணி புரிவோர், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்றவர்கள்
என ஒரு ரசவாதக் கலவையாக மக்கள் புன்னகைகளை அணிந்தபடி நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
“சாப்பிட்டீங்களா? சாப்பிட
வாங்க”, என்று நின்று கொண்டிருந்த அறிமுகமற்ற யார் யாரையோ, யாரோ பலர்
வேண்டிக் கொண்டிருந்தார்கள். முழுக்க மக்கக் கூடிய பொருட்களான மண்ணும், செங்கல்லும், மறுசுழற்சி
செய்யப்பட்ட மரமும், கற்களும் கொண்டு கட்டப்பட்ட குடில்களில் தொட்டில்கள் ஆட்டியபடி
பெண்கள், மகிழ்வுடன் தரையில் அமர்ந்து உணவு அருந்தும் ஆண்கள், குழந்தைகள், அவர்களை
சுற்றி புத்தக அலமாரிகள், அவற்றில் விதைகள், மாதிரிகள், ஐரோமின்
படம், ஓலைக் குடிலில் நடுநாயகமாக கணிணி ஒன்று, சுற்றிலும்
வெறுங்கால்களுடன் ஓடிக் கொண்டிருந்த தன்னார்வலர்கள் என்று ஒருவித்தியாசமான அனுபவத்தை
தரத் துவங்கி இருந்தது- குக்கூ காட்டு வெளி.
குக்கூவிற்கு சிறகு தந்தவர்களில் ஒருவர்- சிவராஜ் அண்ணன் என்று அன்போடு அழைக்கப்படும் நம்பிக்கை மனிதர். தொண்ணூறுகளின்
இறுதியில் அரச்சலூரில் ”மனிதர்கள் மட்டும்” என்ற அமைப்பில்
துவங்கிய கல்வி மறக்கப்பட்ட/மறுக்கப்பட்ட கிராமப்புறக் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்
தரும் இவரது பயணம், சிறாருக்கான கதைகள், நாடகங்கள், முகாம்கள், நூலகங்கள்
என்று தொடர்ந்து, ஜவ்வாது மலையடிவாரத்தில் இந்த ஆறு ஏக்கர் நிலத்தில் வந்து
வேறூன்றி இருக்கிறது. “வேண்டாம்” என நிராகரிக்கப்பட்ட
குப்பைகளே இந்த இடத்தில் நீக்கமற நிறைந்து புது வாழ்வு பெற்று இருக்கின்றன, பீட்டர்
என்ற கட்டிட வடிவமைப்பாளரின் முயற்சியால்! கவுத்திவேடியப்பன்
மலையை மீட்டெடுக்கும் போரட்டத்தில் பங்கு கொண்ட சிறுவர்களே இந்தப் பள்ளியின் எழுச்சிக்கு
ஆதிகாரணிகள் எனலாம்.
நம்மாழ்வாரின் தாக்கம் இங்கு எங்கெங்கு
காணினும் பெருகி வழிகிறது. “இயற்கையோடு இணைந்து, இயற்கையை
அரவணைத்து, இயற்கையை மீட்டெடுப்பது” குக்கூவின்
இலக்கு. எந்த ஆடம்பரமும் இல்லாமல், எந்த விளம்பரமும்
இல்லாமல், வெறும் செவி வழிச் செய்தியாகவேப் பறந்த குக்கூ இன்று தன்னார்வலர்களின்
முயற்சியால் பிரம்மாண்டமாய் சிறகு விரித்து, உயர்ந்து
நிற்கிறது. சமீபத்தில் விகடனின் நம்பிக்கை மனிதர்கள் விருது பெற்ற குக்கூக்
கனவின் மையப் புள்ளிகளில் ஒன்றான சிவராஜ் அண்ணனைத் தேடிப் பிடித்து, “பத்தே பத்து
நிமிஷம் அண்ணா…பேசுங்க ப்ளீஸ்…” என்றதும், உள்ளம்
கொள்ளாச் சிரிப்புடன் பேசத் துவங்கினார். “ஒரு மனிதனின் வாழ்க்கையைத்
தீர்மானிப்பது அவனது பால்ய கால வாழ்க்கை தான். நெல்லிவாசல்
அப்டிங்கற கிராமத்துக்குப் போறோம். அங்கே குழந்தைகளை
படம் வரைய சொல்கிறோம். ஒரு பையன் நீல நிறத்தில் ஒரு வெளியை வரைஞ்சு, அதுல ஒரு
மரம் வரையறான். கடல்ல எப்டிரா மரம் வளரும்னு கேட்டேன். அது கடல்
இல்ல..ஆகாயம்னு சொன்னான். இங்க மரம்
வெச்சோம்னா ஃபாரெஸ்ட்காரங்க வெட்டிட்டு போய்டுறாங்க. அதுனால, ஆகாயத்துல
மரம் வெச்சா பத்திரமா இருக்கும்னு சொல்றான். ஒரு ஜென்
கவிதை இருக்கு…தொலைதூரத்திலே இருந்து பறந்து வரும் ஒரு தட்டானுடைய கண்கள்
ஒரு பெரிய மலையை கண்களுக்குள் பொத்தி வைக்கிறது. அது போல
ஒரு சிறிய எறும்புடைய கண்களுக்கு ஒரு சிறிய மண்துகள் பிரம்மாண்டமான மலையாய்த் தெரிகிறது. இந்தக்
கண்கள் தான் நமக்குத் தேவை. ஒரு குழந்தை செய்ற மிகப்பெரிய தவறே அது வளருவது தான்.
நம்மாழ்வார் எனக்கு மானசீக குரு, அன்பார்ந்த
தோழன். அவர் மறைந்த போது எனக்கு உற்ற தோழனாக உடன் நின்றது சுபித். மனிதனின்
அறிவில் இருந்து வந்ததை மண் சாப்பிடாது, அன்பிலிருந்து வந்ததை
மண் சாப்பிடும் அப்டிங்கறது அவரோட நம்பிக்கை. தன்னியல்போட
எங்க சுயத்தை நாங்க உணர உதவியது குழந்தைகளுடைய அருகாமை. இங்கே தொடர்ச்சியா
முகாம்கள் நடத்தி பாடத்திட்டம் உருவாக்கணும். மண், காகிதம், பனை ஓலை
இவற்றின் தன்மைகளை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கணும். அரவிந்த்
குப்தா போன்ற மிகமுக்கியமான குழந்தை சார் அறிவியலாளர்களை அழைச்சிட்டு வந்து இந்த முகாம்களை
நடத்தத் திட்டம். மீனவ சமுதாயம், மலை கிராமம் என்று
யார் வேண்டுமானாலும் இங்கு வரலாம், படிக்கலாம். இந்த தளத்தை
ஒரு துவக்கப் புள்ளியா வெச்சு யார் வேண்டுமானாலும் குழந்தைகளுடன் இந்த முயற்சியை மேற்கொண்டு
எடுத்துச் செல்லலாம். அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்கள் கற்றுத் தர இங்க இருக்கிறாங்க. மூணு வருஷம்
நாங்க இங்க இருக்கோம். நேசன், பீட்டர் அண்ணானு இந்த ஊரோட வீட்டு ஆட்களாகவே எல்லாரும் பழகிட்டோம். அவங்க ஆதரவு
இருக்கும்னு நம்புறோம்”, என்றபடி நகர்கிறார்.
மெல்ல நடந்து காட்டை ஒட்டிய ஓடையை அடைகிறோம். வறண்ட ஓடையில்
சரசரவென சருகுகள் ஒரு பக்கம் உதிர, மூங்கில்களுக்குள்
காற்று குழந்தையாய்த் தவழ்ந்து வருகிறது. சிறிய ஓய்விற்குப்
பின் குக்கூவின் கிணறு நோக்கி நடக்கிறோம். தூக்கணாங்குருவிக்
கூடுகள் தொங்கிய மரத்தின் வேர்கள் படர்ந்த கிணற்றில், கூட்டமாய்
குதித்து, மீசை வைத்த குழந்தைகள் குதூகலிக்கிறார்கள். ஆங்காங்கே
மரங்களிலும், குடில் வாயிலிலும் தொங்கும் மணிகள் காற்றில் அசைந்து ஒலி
எழுப்புவதை வளர்ந்த குழந்தைகள் ஒலித்துப் பார்த்து சிரிக்கிறார்கள். சைக்கிள்களை
ஓட்டியபடி சிறுவர்கள் பறக்கிறார்கள். தொட்டியில் நீர்
நிறப்புவதை கூட்டமாக சிறுவர்கள் ஆர்ப்பரித்து ரசிக்கிறார்கள். வாயிற்கல்லில்
கட்டிய கயிற்றை அவிழ்த்து பள்ளியைத் திறந்து வைக்கிறார் அரவிந்த் குப்தா. இங்கு எதுவும்
நிரந்தரம் இல்லை என்பதை உணர்த்த சுத்தி கொண்டு அடித்து வாயிலின் ஒரு ஓரத்தை உடைக்கிறான்
சிறுவன் ஒருவன். உள்ளே தொட்டிலில் படுக்க வைக்கப்பட்ட சிசு ஒன்றுக்கு ஆசையுடன்
அள்ளி அணைத்துப் பெயரிடுகிறார் அரவிந்த் குப்தா. பதினைந்து
ஆண்டுகளாக புற்று நோயுடன் போராடிக் கொண்டிருந்தாலும், அலைந்து
திரிந்து குழந்தைகளுக்காய் உழைக்கும் இவர், அவர்கள்
மேல் கொண்டிருக்கும் அன்பை உணர்த்திய நெகிழ் தருணம் அது!
ஒரு தொட்டிலுக்கும், நடுகல்லுக்கும்
இடையே போடப்பட்ட கல் இருக்கையில் தலைமை விருந்தினர்கள் அமர, விழா துவங்குகிறது. சிலம்பம், கம்பு என
அடித்து ஆடுகிறார்கள் குழந்தைகள். வேலு சரவணனின் நாடகத்தில் ஒன்றித்து பெரியவர்களும் குழந்தைகளாகி
குதூகலித்த நேரத்தில் மெல்ல இருள் கவியத் தொடங்குகிறது. நட்சத்திரங்கள்
பூக்கத் தொடங்கிய அந்த பின்மாலைப் பொழுதில், குயில்
கூட்டில் இருந்து பிரிய மனமற்று வெளிவருகிறேன். இந்த குயில்
கூடு காத்திருக்கிறது, இயற்கையை நேசிக்கும் கடவுள்களுக்காய்…நம் குழந்தைகளுக்காய்…
No comments:
Post a Comment
Hey, just let me know your feedback:)