Showing posts with label வரலாற்றுப் பயணங்கள். Show all posts
Showing posts with label வரலாற்றுப் பயணங்கள். Show all posts

Monday, 1 May 2017

தேசிங்குராஜனின் குதிரைப் பெயர் என்ன?

அவள் விகடன், 02.05.17.





காத்திருக்காதே! வெளியேறுவாழ்வு உணர்கதிரவனைத் தொடுகடலில் மூழ்கு!”- ரூமி. ஆரணி வரை ஒரு நாள் பயணம். பயணங்களில் ஓராயிரம் கேள்விகளுக்கு பதில் காண முடியுமா என்று கேட்டால், நான் ஆம் என்று பதில் சொல்வேன். காரணம்- மோகன் ஹரிஹரன். இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்த சென்னையின் தலை சிறந்த கட்டிட வடிவமைப்பாளர்களில் ஒருவர். நண்பர்கள் பதினாறு பேருடன் வண்டி சென்னை தாண்டியதும், கையில் வந்தது வினாடி வினாத் தாள் ஒன்று. முதல் கேள்வியே, தேசிங்கு ராஜனின் குதிரைப் பெயர் என்ன? யோசித்து யோசித்து, பதில் தெரியாமல் தோல்வியை ஒப்புக் கொண்டாயிற்று. சென்னையின் வரலாறும், வழியில் தாமல், காவேரிபாக்கம், வாலாஜா, ராணிபேட்டை, ஆற்காடு என எல்லா ஊர்களின் வரலாறும் சிற்றுண்டியோடு சேர்த்து அலசியாயிற்று.

முதலில் நாங்கள் பார்த்த இடம், ஆரணிக் கோட்டையில் உள்ள கைலாசநாதர் கோயில். மேள தாளத்துடன், மாலை, மரியாதையுடன் வரவேற்றனர் கோயில் நிர்வாகிகள். கும்பாபிஷேகத்துக்கு கோயில் தயார் ஆகிக் கொண்டு இருந்ததால்,  மூலவர் வெளிப்பிரகாரத்தில் காட்சி தந்தார். விசேட பூசை முடிந்து கோயிலை சுற்றிப் பார்த்தோம். 13ம் நூற்றாண்டு சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் சம்புவராயர், விஜயநகர மன்னர்களால் எழில் ஊட்டப் பட்டிருக்கிறது இந்தக் கோயில். சோழர் கால பிள்ளையார் சிலை பேரழகுடன் மிளிர்கிறது. கோபுரக் கலசங்களைப் பிரித்து அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதனுள் இருந்த வரகு தானியத்தை ஆராய்கிறது குழு. பேரிடர் சமயத்தில், உயரமான கலசங்களில் சேமிக்கும் இந்த தானியம், ஊருக்கே உணவளிக்கக் கூடியது. இன்னமும் இந்த நடைமுறை பின்பற்றப் படுவது குறித்த ஆச்சர்யத்துடன் கோயிலுள் இருந்த உற்சவர் சிலைகளை பார்த்து ரசிக்கிறோம். கூந்தல் காற்றில் பறக்க பிரம்மாண்ட தாண்டவத்தில் நடராஜர், சோமாஸ்கந்தர் என நுண்ணிய வேலைப்பாடுடன் கூடிய சிலைகள். வெளிப் பிரகாரத்தில் 1008 லிங்கம், அறுபத்து மூவர் என வரிசையாக உளிகள் செதுக்கிய அற்புதங்கள்.




அடுத்து சென்றது ராபர்ட் கெல்லி நினைவுத் தூபி. கோட்டையினுள் கோரி மைதானத்தில் சுமார் நாற்பது அடி உயரத்தில் நிற்கிறது, ராபர்ட் கெல்லி என்ற சீஃப் கம்மாண்டரின் நினைவுத் தூபி. 1790ல் இதனைக் கட்டியது அவரை போட்டியில் கொன்று வீழ்த்திய கர்னல் விகொர்ஸின் மகன் என்பது கூடுதல் ஆச்சர்யம்.


அடுத்து சென்றது ஆரணியில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள சத்தியவிஜயநகரம் அரண்மனை. வீர சிவாஜியின் தந்தையான ஷாஜி 1640லம் ஆண்டு கர்நாடக போரின் போது தனக்கு விசுவாசமாக பணிபுரிந்த வேதாஜி பாஸ்கர பந்த்துக்கு 192 கிராமங்கள் உள்ளடக்கிய ஆரணி ஜாகிரைப் பரிசளித்தார். கமண்டலநாக நதிக்கரையில் உத்தராதி மடத்தைச் சார்ந்த மாதவகுல சத்திய விஜய சுவாமியின் மூல பிருந்தாவனத்தை ஒட்டி பாஸ்கர பந்த்தின் வழித்தோன்றல்கள் ஆரணி ஜாகிரின் தலமை இடமாக உருவாக்கிய அழகிய நகரம் தான் சத்தியவிஜயநகரம். ராஜபாட்டையும், குதிரை லாயங்களும், “ஸ்டூவர்ட்என்ற கட்டிட முறைப்படி சுமார் 1825ல் கட்டப்பட்டு, 1876ல் விரிவாக்கப்பட்டிருக்கும் திவான் கானா அரண்மனையும் என ஒரு அதியற்புதமான கடந்த காலத்தை நினைவூட்டுகிறது இந்நகரம். வெறிச்சோடியிருக்கும் சன்னலோ, கதவுகளோ அற்ற அரண்மனை, கொரிந்திய வடிவமைப்பிலான தூண்கள், வட்ட வடிவ செங்கல், எதிராளிகளை ஏமாற்ற கதவு போல வடிவமைக்கப்பட்ட சுவர், பிரம்மாண்டமான தாழ்வாரங்கள், சுண்ணாம்புக் காரையும், முட்டையும், கடுக்காயும் கொண்டு இழைத்து செய்யப்பட்ட வழு வழு சுவருடன், ஆங்காங்கே வளர்ந்து தாங்கிப் பிடித்திருக்கும் மரங்களின் துணையுடன் நின்று கொண்டிருக்கிறது. ராணியின் அரண்மனையும், தர்பார் மண்டபமும் அரசால் புனரமைக்கப்பட்டு அழகாக காட்சி தருகின்றன. சர் சிவி ராமன், எஸ் சந்திரசேகர் போன்ற விஞ்ஞானிகளுக்கு ஆரணி பதக்கம் ஒன்றையும் நிறுவி, பரிசு தந்து இருக்கிறார்கள் ஜாகிர்கள். ஒரு சமயம் 182 கார்களுடன் சர்வ வல்லமையுடன் வலம் வந்த ஜாகிர்கள், 1948ல் ஜமீன்தாரி சட்டம் இயற்றப்பட்ட பின் குடியிருந்த அரண்மனையை அரசுக்குப் பறிகொடுத்தார்கள். இன்னும் சில ஆண்டுகள் கழித்து மண்ணோடு இந்த அற்புத அரண்மனையும் மக்கிப் போகும் சாத்தியக் கூறு மிக அதிகம்.






அடுத்து சென்றது, ஆரணியில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள பூண்டிப் பொன்னெழில்நாதர் சமண ஆலயம். கல்வெட்டுக்களின் படி 1305ல் வீரசம்புவன் என்ற சம்புவராய மன்னனால் கட்டப்பட்டு, வீர வீர ஜீனாலயம் என அழைக்கப்பட்ட இந்த ஆலயம் சோழர் கால கட்டிட வடிவமைப்புடன் மிளிர்கிறது. தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில், மூலவரான பரசுவநாதர் ஐந்து அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். அவரது தலைக்கு குடையாக ஐந்து தலை நாகம் ஒன்று, அவர் பாதம் வரை வாலுடன் காட்சி தருகிறது. ஆதிநாதர் என்ற பொன்னெழில்நாதரின் சிலையும் கோயிலுக்கு அழகு சேர்க்கிறது. இவை தவிர 24 தீர்த்தங்கரர்களின் உருவங்கள் வடிக்கப்பட்ட ஒற்றைக்கல் முகப்புகள் இரண்டு உள்ளன. வெளிப்பிரகாரத்தில் லக்ஷ்மி தேவி, சரஸ்வதி தேவி, சந்திரப்ப்ரபநாதர், ஜ்வலமாலினி தேவி, பிரம்மதேவர், தர்ம தேவி, சக்ரேஷ்வரி, பத்மாவதி தேவி என வரிசையாக அணிவகுக்கின்றன சமணக் கடவுளர்களின் சிலைகள். சுற்று வட்டாரத்தில் சுமார் ஆயிரம் சமணர்கள் இருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் ஐந்தாம் தேதி ஆராதனை விழா மிக சிறப்பாக நடைபெருவதாகவும் கோயில் நிர்வாகி தெரிவித்தார். இது தவிர மகாவீர ஜெயந்தி, ஆவணி அவிட்டம் என அத்தனை சமண விழாக்களும் கொண்டாடுகிறார்கள் தமிழ் சமணர்கள்.




மதிய உணவுக்குப் பின்  கண்ணாடி மாளிகை என அழைக்கப் படும் பூசிமலைக்குப்பம் அரண்மனைக்குச் சென்றோம். ஜாகிர்களின் வேட்டையிடமானஷூட்டிங்க் பாக்ஸ்என அழைக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட அரண்மனையைச் சுற்றி ஆயிரக்கணக்கில் மரங்கள் நட்டிருக்கிறார்கள் ஜாகிர்கள். பச்சை வயல் வெளிகளுக்கு ஊடாக வளைந்து நெளிந்து சென்ற பாதையின் முடிவில், அடர்சிவப்பு நிறத்தில், ஐரோப்பிய வடிவமைப்புடன் அசரடிக்கிறது இந்த அழகிய மாளிகை. டபிள் யூ.என். பாக்ஸன் என்ற வடிவமைப்பாளரால் 1850ல் வடிவமைக்கப்பட்டு, 1860ல் எட்டாவது ஜாகிரான ஸ்ரீனிவாச ராவ் சாஹிபால் கட்டப்பட்ட இந்த மூன்று தள மாளிகை, அழகிய நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்தது. தனி சமையலறை, உணவருந்தும் கூடம், புறாக்களுக்கு கூண்டு, ஒவ்வொரு அறையிலும் ஐரோப்பிய முறையிலான கணப்பு அடுப்பு, கூரையில் ஒப்பனைத் தாள், பளிங்குத் தரை என உள்ளம் கவர்கிறது. ஒரு காலத்தில் விருந்தும், கேளிக்கையும் கோலோச்சிய மாளிகையின் வாசல் முதல் சுவர் வரை வரிசையாக பேய்ப்படங்களின் பெயர்களை எழுதி வைத்து அருவெறுப்பு ஊட்டி இருந்தனர் சிலர். வெப்பப் பிரதேசத்தில், காட்டின் நடுவே, அந்த மாளிகையில் தனிமையில் ராணியாக வலம் வந்த ஆங்கிலேயப் பெண் என பரவலாக சொல்லப்படும் பெண்ணின் எண்ண ஓட்டம் என்னவாய் இருந்திருக்கும் என யோசிக்க முயல்கிறேன். 1860ல் இங்கிலாந்து கிளாஸ்கோ நகரில் செய்யப்பட்ட வார்ப்பு இரும்பினாலான குழாய்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட தூண்கள், ஒரு புறம் கட்டிடத்தை தாங்கியும், இன்னொரு புறம் மழைநீரை வெளியேற்றும் வடிகாலாகவும் இரட்டைப் பணியை அழகாக செய்கின்றன. அனைவரும் ஓடிச் சென்று மாளிகையின் முன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இவர் தான் என்மேன் ஃப்ரைடேஎன்று எங்களுக்கு அன்று முழுதும் துணை வந்து வழிகாட்டிய ஆரணி டைம்ஸ் ஆசிரியரான சுதாகரைப் பாராட்டினார் மோகன். வரும் வழியில் ஆரணியின் ஸ்பெஷலான மக்கன் பேடாவை வாங்கி பத்திரப் படுத்தி ஆயிற்று.


ஒரு திருப்தியான பயணம் சென்ற களைப்பில் உடல் இருந்தாலும், மனம் என்னவோ அரண்மனைகளையே சுற்றி வந்து கொண்டிருந்தது. எப்பேர்பட்ட மன்னர் மன்னரும், அவர் கட்டி ஆண்ட கோட்டையும், இறுதியில் மண்ணோடு மண்ணாகித்தான் விடும் என்ற நிதர்சனம் புரியத் துவங்க, தூக்கம் கண்களை அழுத்திற்று. ஆங்சொல்ல மறந்துவிட்டேனேதேசிங்கு ராஜனின் குதிரைக்கு மூன்று பெயர்கள்- நீலவேணி, பாரா ஹஜாரி, பஞ்சகல்யாணி!


குழந்தைகளுக்காகக் காத்திருக்கும் குயில் கூடு

அவள் விகடன், 02.05.17



சரவணனுக்குத் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். “வாங்க, புளியானூர் போகலாம்என்று நெஞ்சில் முதல் ஆசை விதையைத் தூவிய நண்பன் அவன். கூடவே மயில்சாமியும்! பள்ளிப் பருவத்து நண்பர்கள்! கோடை வெயிலில் திருப்பத்தூர் எத்தனை குளுகுளு நகரமாக இருக்கும் என்பதை உக்கிரமாக சூரியன் நிரூபித்துக் கொண்டிருந்த ஒரு நடுமதியம் காரில் புளியானூர் குக்கூ மாற்றுப் பள்ளி நோக்கி பயணம் துவங்கியது. சிங்காரப்பேட்டை பிரிவில் இருந்து, புளியானூர் வரை வழி எங்கும் மாந்தோப்பு. அடடாவண்டியில் ஒரு கோணிப்பை இல்லையே என்ற வருத்தம் மேலிட ஊரார் தோட்டத்து மாங்காய் புளிக்கும் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே ஊரை அடைந்தோம்.


இங்க குக்கூ ஸ்கூலுக்கு எப்டிம்மா போகணும்?”, என்றதும் ஒரு அம்மா, குதூகலத்துடன் வண்டியில் ஏறிக்கொண்டார். “புள்ளைங்க காலைல ஆறு மணிக்கெல்லாம் போய்ட்டாங்கஎனக்கு இப்போ தான் வர முடிஞ்சிதுஎன்றபடி, “இந்த ரோடு கூட அவுக போட்டது தான்”, என்று புன்னகையுடன் சொல்லிக்கொண்டு வந்தார். மண்சாலையில் கார் தவழ்ந்து மெல்ல அடைந்த இடம்- ஒரு கிராமத்து திருவிழாவுக்கு உண்டான அத்தனை அழகியலையும் கடை பரப்பி வைத்து இருந்தது. முதலில் கண்ணில் பட்டவர்கள்- குழந்தைகள். அடுத்து- குழந்தைகளாக முழுக்க மாறி விட்டிருந்த பெரியவர்கள். ஐடியில் பணி புரிவோர், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்றவர்கள் என ஒரு ரசவாதக் கலவையாக மக்கள் புன்னகைகளை அணிந்தபடி நடமாடிக் கொண்டிருந்தார்கள்.



சாப்பிட்டீங்களா? சாப்பிட வாங்க”, என்று நின்று கொண்டிருந்த அறிமுகமற்ற யார் யாரையோ, யாரோ பலர் வேண்டிக் கொண்டிருந்தார்கள். முழுக்க மக்கக் கூடிய பொருட்களான மண்ணும், செங்கல்லும், மறுசுழற்சி செய்யப்பட்ட மரமும், கற்களும் கொண்டு கட்டப்பட்ட குடில்களில் தொட்டில்கள் ஆட்டியபடி பெண்கள், மகிழ்வுடன் தரையில் அமர்ந்து உணவு அருந்தும் ஆண்கள், குழந்தைகள், அவர்களை சுற்றி புத்தக அலமாரிகள், அவற்றில் விதைகள், மாதிரிகள், ஐரோமின் படம், ஓலைக் குடிலில் நடுநாயகமாக கணிணி ஒன்று, சுற்றிலும் வெறுங்கால்களுடன் ஓடிக் கொண்டிருந்த தன்னார்வலர்கள் என்று ஒருவித்தியாசமான அனுபவத்தை தரத் துவங்கி இருந்தது- குக்கூ காட்டு வெளி.

குக்கூவிற்கு சிறகு தந்தவர்களில் ஒருவர்-  சிவராஜ் அண்ணன் என்று அன்போடு அழைக்கப்படும் நம்பிக்கை மனிதர். தொண்ணூறுகளின் இறுதியில் அரச்சலூரில்மனிதர்கள் மட்டும்என்ற அமைப்பில் துவங்கிய கல்வி மறக்கப்பட்ட/மறுக்கப்பட்ட கிராமப்புறக் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தரும் இவரது பயணம், சிறாருக்கான கதைகள், நாடகங்கள், முகாம்கள், நூலகங்கள் என்று தொடர்ந்து, ஜவ்வாது மலையடிவாரத்தில் இந்த ஆறு ஏக்கர் நிலத்தில் வந்து வேறூன்றி இருக்கிறது. “வேண்டாம்என நிராகரிக்கப்பட்ட குப்பைகளே இந்த இடத்தில் நீக்கமற நிறைந்து புது வாழ்வு பெற்று இருக்கின்றன, பீட்டர் என்ற கட்டிட வடிவமைப்பாளரின் முயற்சியால்! கவுத்திவேடியப்பன் மலையை மீட்டெடுக்கும் போரட்டத்தில் பங்கு கொண்ட சிறுவர்களே இந்தப் பள்ளியின் எழுச்சிக்கு ஆதிகாரணிகள் எனலாம்.





நம்மாழ்வாரின் தாக்கம் இங்கு எங்கெங்கு காணினும் பெருகி வழிகிறது. “இயற்கையோடு இணைந்து, இயற்கையை அரவணைத்து, இயற்கையை மீட்டெடுப்பதுகுக்கூவின் இலக்கு. எந்த ஆடம்பரமும் இல்லாமல், எந்த விளம்பரமும் இல்லாமல், வெறும் செவி வழிச் செய்தியாகவேப் பறந்த குக்கூ இன்று தன்னார்வலர்களின் முயற்சியால் பிரம்மாண்டமாய் சிறகு விரித்து, உயர்ந்து நிற்கிறது. சமீபத்தில் விகடனின் நம்பிக்கை மனிதர்கள் விருது பெற்ற குக்கூக் கனவின் மையப் புள்ளிகளில் ஒன்றான சிவராஜ் அண்ணனைத் தேடிப் பிடித்து, “பத்தே பத்து நிமிஷம் அண்ணாபேசுங்க ப்ளீஸ்…” என்றதும், உள்ளம் கொள்ளாச் சிரிப்புடன் பேசத் துவங்கினார். “ஒரு மனிதனின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது அவனது பால்ய கால வாழ்க்கை தான். நெல்லிவாசல் அப்டிங்கற கிராமத்துக்குப் போறோம். அங்கே குழந்தைகளை படம் வரைய சொல்கிறோம். ஒரு பையன் நீல நிறத்தில் ஒரு வெளியை வரைஞ்சு, அதுல ஒரு மரம் வரையறான். கடல்ல எப்டிரா மரம் வளரும்னு கேட்டேன். அது கடல் இல்ல..ஆகாயம்னு சொன்னான். இங்க மரம் வெச்சோம்னா ஃபாரெஸ்ட்காரங்க வெட்டிட்டு போய்டுறாங்க. அதுனால, ஆகாயத்துல மரம் வெச்சா பத்திரமா இருக்கும்னு சொல்றான். ஒரு ஜென் கவிதை இருக்குதொலைதூரத்திலே இருந்து பறந்து வரும் ஒரு தட்டானுடைய கண்கள் ஒரு பெரிய மலையை கண்களுக்குள் பொத்தி வைக்கிறது. அது போல ஒரு சிறிய எறும்புடைய கண்களுக்கு ஒரு சிறிய மண்துகள் பிரம்மாண்டமான மலையாய்த் தெரிகிறது. இந்தக் கண்கள் தான் நமக்குத் தேவை. ஒரு குழந்தை செய்ற மிகப்பெரிய தவறே அது வளருவது தான்.




நம்மாழ்வார் எனக்கு மானசீக குரு, அன்பார்ந்த தோழன். அவர் மறைந்த போது எனக்கு உற்ற தோழனாக உடன் நின்றது சுபித். மனிதனின் அறிவில் இருந்து வந்ததை மண் சாப்பிடாது, அன்பிலிருந்து வந்ததை மண் சாப்பிடும் அப்டிங்கறது அவரோட நம்பிக்கை. தன்னியல்போட எங்க சுயத்தை நாங்க உணர உதவியது குழந்தைகளுடைய அருகாமை. இங்கே தொடர்ச்சியா முகாம்கள் நடத்தி பாடத்திட்டம் உருவாக்கணும். மண், காகிதம், பனை ஓலை இவற்றின் தன்மைகளை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கணும். அரவிந்த் குப்தா போன்ற மிகமுக்கியமான குழந்தை சார் அறிவியலாளர்களை அழைச்சிட்டு வந்து இந்த முகாம்களை நடத்தத் திட்டம். மீனவ சமுதாயம், மலை கிராமம் என்று யார் வேண்டுமானாலும் இங்கு வரலாம், படிக்கலாம். இந்த தளத்தை ஒரு துவக்கப் புள்ளியா வெச்சு யார் வேண்டுமானாலும் குழந்தைகளுடன் இந்த முயற்சியை மேற்கொண்டு எடுத்துச் செல்லலாம். அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்கள் கற்றுத் தர இங்க இருக்கிறாங்க. மூணு வருஷம் நாங்க இங்க இருக்கோம். நேசன், பீட்டர் அண்ணானு இந்த ஊரோட வீட்டு ஆட்களாகவே எல்லாரும் பழகிட்டோம். அவங்க ஆதரவு இருக்கும்னு நம்புறோம்”, என்றபடி நகர்கிறார்.

மெல்ல நடந்து காட்டை ஒட்டிய ஓடையை அடைகிறோம். வறண்ட ஓடையில் சரசரவென சருகுகள் ஒரு பக்கம் உதிர, மூங்கில்களுக்குள் காற்று குழந்தையாய்த் தவழ்ந்து வருகிறது. சிறிய ஓய்விற்குப் பின் குக்கூவின் கிணறு நோக்கி நடக்கிறோம். தூக்கணாங்குருவிக் கூடுகள் தொங்கிய மரத்தின் வேர்கள் படர்ந்த கிணற்றில், கூட்டமாய் குதித்து, மீசை வைத்த குழந்தைகள் குதூகலிக்கிறார்கள். ஆங்காங்கே மரங்களிலும், குடில் வாயிலிலும் தொங்கும் மணிகள் காற்றில் அசைந்து ஒலி எழுப்புவதை வளர்ந்த குழந்தைகள் ஒலித்துப் பார்த்து சிரிக்கிறார்கள். சைக்கிள்களை ஓட்டியபடி சிறுவர்கள் பறக்கிறார்கள். தொட்டியில் நீர் நிறப்புவதை கூட்டமாக சிறுவர்கள் ஆர்ப்பரித்து ரசிக்கிறார்கள். வாயிற்கல்லில் கட்டிய கயிற்றை அவிழ்த்து பள்ளியைத் திறந்து வைக்கிறார் அரவிந்த் குப்தா. இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை உணர்த்த சுத்தி கொண்டு அடித்து வாயிலின் ஒரு ஓரத்தை உடைக்கிறான் சிறுவன் ஒருவன். உள்ளே தொட்டிலில் படுக்க வைக்கப்பட்ட சிசு ஒன்றுக்கு ஆசையுடன் அள்ளி அணைத்துப் பெயரிடுகிறார் அரவிந்த் குப்தா. பதினைந்து ஆண்டுகளாக புற்று நோயுடன் போராடிக் கொண்டிருந்தாலும், அலைந்து திரிந்து குழந்தைகளுக்காய் உழைக்கும் இவர், அவர்கள் மேல் கொண்டிருக்கும் அன்பை உணர்த்திய நெகிழ் தருணம் அது!





ஒரு தொட்டிலுக்கும், நடுகல்லுக்கும் இடையே போடப்பட்ட கல் இருக்கையில் தலைமை விருந்தினர்கள் அமர, விழா துவங்குகிறது. சிலம்பம், கம்பு என அடித்து ஆடுகிறார்கள் குழந்தைகள். வேலு சரவணனின் நாடகத்தில் ஒன்றித்து பெரியவர்களும் குழந்தைகளாகி குதூகலித்த நேரத்தில் மெல்ல இருள் கவியத் தொடங்குகிறது. நட்சத்திரங்கள் பூக்கத் தொடங்கிய அந்த பின்மாலைப் பொழுதில், குயில் கூட்டில் இருந்து பிரிய மனமற்று வெளிவருகிறேன். இந்த குயில் கூடு காத்திருக்கிறது, இயற்கையை நேசிக்கும் கடவுள்களுக்காய்நம் குழந்தைகளுக்காய்