அவள் விகடன், 21.3.17
“பயணம்- காதலையும், சக்தியையும்
உன் வாழ்க்கைக்கு திருப்பித் தரவல்லது”- ரூமி. பயணங்களற்ற
வாழ்க்கை, காதல் அற்றது. வெறுமையானது. ‘ட்ராவல்
பை விம்’- எந்த திட்டமிடலும் இல்லாமல் திடீர் என கைகளில் காமிராவுடன்
கிளம்பி செல்வது ஒரு புது அனுபவமாகவே இருந்தது. இம்முறை
வடசென்னையின் சில நீராதாரங்கள், சென்னையின் சுவர், சோழவரம்
இரண்டாம் உலகப்போர் ரன்வே, திருக்கள்ளில் தேவாரப் பாடல் தலம் மற்றும் பழவேற்காடு என
கொஞ்சம் பெரிய பயணமாகவே ஏற்பாடு செய்திருந்தார் வரலாற்று ஆசிரியர் வெங்கடேஷ்.
டேர் ஹவுஸ் வாசலில் உள்ள எஸ்பிளனேட் பில்லர் முன்னர் காலை ஏழு மணிக்கு சந்திப்பதாகத்
திட்டம். டேர் ஹவுஸ் என்பது பாரி முனை பாரி பில்டிங் என்பதை டாக்சி
டிரைவரிடம் விளக்கி சென்று சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஃப்ரெஞ்சுப்
படைகளிடம் இருந்து அன்றைய மதராஸ் நகரத்தைக் காப்பாற்ற வரையறுத்த எல்லை தான் இன்று பாரி
பில்டிங் முன் கம்பீரமாக நிற்கும் தூண். ஜனவரி 1, 1773ல் நிறுவப்பட்ட
அந்த சதுர தூபி (ஒபெலிஸ்க்) ஜார்ஜ் டவுனுக்கும் அன்றைய
நியூ ப்ளாக் டவுனுக்கும் இடையே நகரைக் காத்து நின்ற தூண். அவசரமாக
ஓடிவந்த வேலுதரன் ஐயா, “எம்டனைப் பார்க்கலாம் வாங்க” என்று
இழுக்க, ஹைகோர்ட் வாசலில் சென்று நின்றோம். 1914ம் ஆண்டு
முதலாம் உலகப் போர் சமயம் எம்டன் போர்க்கப்பல் மதராஸ் மீது நடத்திய தாக்குதலில் தகர்ந்த
ஹைகோர்ட்டின் மதில் சுவர் பகுதியில் அதன் நினைவாக நிறுவப்பட்ட ஒரு கல்வெட்டையும் பார்த்தாயிற்று. காலை
சிற்றுண்டியை முடித்து விட்டே இரண்டு கார்களில் பயணத்தைத் துவக்கினோம்.
முதலில் சென்றது சென்னையின் வடக்குச் சுவர். சீனப்
பெருஞ்சுவர் போல பெருஞ்சுவர் இல்லையெனினும், ஹைதர்
அலி மற்றும் திப்புவின் படைகளிடம் இருந்து மதராஸைக் காப்பாற்ற கட்டப் பட்ட அரண்- ஆறு கிலோமீட்டர்
நீளம் இருந்த மதராஸ் சுவர். இன்று சுமார் அறுபது அடி நீளமும், பன்னிரண்டு
அடி அகலமுமாக சுருங்கிவிட்டாலும், சேப்பாக்கம் அரண்மனையை வடிவமைத்த பால் பென்ஃபீல்டால், 1772ல் கட்டி
முடிக்கப்பட்ட இந்த சுவர், அன்று 17 கோட்டை அரண் முகப்புகளுடனும், 7 வாயில்களுடனும்
பிரம்மாண்டமாய் இருந்தாலும்,
1850களில், நகர விரிவாக்கத்துக்கென
தகர்க்கப்பட்டது. அதன் சிறு பகுதி மட்டும் இன்று ஒரு வரலாற்று சின்னமாய், மாடிப்
பூங்காவாக ராயபுரம் இப்ராஹிம் தெருவில் அமைதியாக நிற்கிறது, நூற்றாண்டுகளைத்
தாண்டி…
அடுத்த அரைமணி நேரப் பயணத்துக்குப்பின் கால்கள் இளைப்பாறியது புழல் நீர்த்தேக்கத்தில். 1876ல் ஆங்கிலேயரால்
சென்னை நகரத்துக்கு நீர் கொண்டுவர வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட நீர்த்தேக்கம் புழல். கொர்ட்டலையார்
ஆற்றில் இருந்து தாமரைப்பாக்கம், சோழவரம் ஏரி மூலமாக கொண்டு வரப்பட்ட தண்ணீர், ரெட்
ஹில்ஸில் உள்ள வால்வு ஹவுஸ் வழியாக கீழ்பாக்கம் வரை கொண்டு வரப்பட்டது. நவீன
கருவிகள் எதுவுமின்றி, நூற்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே நீர் ஆதாரத்தை சரியாக
உபயோகிக்கத் தெரிந்த ஆங்கிலேயர் மேல் மரியாதையும், அதை இன்று
காக்கத் தவறிய நம் மேல் கோபமும் வரத்தான் செய்கிறது. சென்னை
பெறும் கிருஷ்ணா நதிநீர் புழல் தேக்கத்தில் தான் சேமிக்கப் படுகிறது.
புகைப்படங்கள் எடுத்த பின் அங்கிருந்து கிளம்பினோம். அடுத்த
நிறுத்தம் சோழவரத்தில் உள்ள இரண்டாம் உலகப்போரின் போது உபயோகப் படுத்தப்பட்ட விமான
ஓடுதளம் (ரன்வே). தற்போது ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதை நெருங்கக்
கூட முடியவில்லை. தொலைவில் இருந்தே ஏக்கத்துடன் பார்த்துத் திரும்பினோம். துப்பாக்கி
ஏந்திய ராணுவ வீரர்களைக் கண்டு நாங்கள் கொஞ்சமும்(!) அஞ்சவில்லை
என்பதைப் பதிவு செய்கிறேன்! தாமரைப்பாக்கம் சிவன் கோவில் அடுத்த நிறுத்தம். லிங்க
வடிவில் பிரம்மாண்டமாய் உயர்ந்து நிற்கும் கோவிலின் சிறப்பு அதன் ஒலிநுட்பம் (அக்கவுஸ்டிக்ஸ்). ஓம் என்ற
நாதம் மெல்லிதாக எழுந்தாலும் பெரும் அதிர்வைத் தரும் அதன் லிங்க வடிவமைப்பு கண்டும்
கேட்டும் மெய்சிலிர்த்துத் தான் போனோம்.
அடுத்து சென்றது தாமரைப்பாக்கம் தடுப்பணை. 1868ல் கட்டப்பட்ட
இந்த அணை, கொசஸ்தலையாற்றின் மீது சிவப்பு வண்ண லேட்டரைட் கற்கள் கொண்டு
வடிவமைக்கப் பட்டிருக்கிறது. தானியங்கி மதகுகளுடன் பிரம்மாண்டமாய் நிற்கும் அணையில் ஒரு
சொட்டு தண்ணீர் இல்லை. அணைக்கு அருகே, 1915ல் கட்டப்பட்ட பொதுப்பணித்துறை
ஆய்வு மாளிகை ஒன்று இடிந்து தகர்ந்து “உள்ளே போய்(பேய்?) இருக்கிறது…வராதே” என்ற
எச்சரிக்கையுடன் பயமுறுத்தியது. தங்கள் காதலை அதன் சுவர்களில் செதுக்கி (கிறுக்கி) வைத்திருந்த
ரோமியோக்களை நொந்து கொள்ளத்தான் முடிந்தது. சிறிது
செப்பனிட்டால் தாராளமாக உபயோகிக்கக் கூடியக் கட்டிடமே அது.
திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர்(திருக்கள்ளீஸ்வரர்), ஆன்ந்தவல்லியம்மை
கோவில்- திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற தலம். முன்புறம்
அழகிய சிறு குளமும் (நந்தி தீர்த்தம்), புளிய
மரங்களும் அடர்ந்த பகுதியில் அமைந்திருக்கிறது. சுவாமி
தரிசனத்துக்கென கர்ப்ப கிருகத்தில் எட்டிப் பார்த்தால், பஞ்சகோண
உத்திரத்தில் கல்வெட்டுக்கள். அவற்றைப் படிக்க முடியாமல் வெள்ளைப் பூச்சு மூடியிருக்கிறது. வெளிவந்தால், கோவில்
சுவர் முழுக்க கல்வெட்டுக்கள். நீல நிற பெயிண்டுக்குள் ஒளிந்திருந்த சக்கரவர்த்தி விக்கிரம
சோழனின் பெயரைப் படித்து உய்வதற்குள் தலை சுற்றிவிட்டது. பாண்டிய
மற்றும் விஜயநகர கல்வெட்டுக்களும் உண்டு. பிருகு முனிவர் வணங்கும்
சக்தி-தக்ஷிணாமூர்த்தி இந்தக் கோவிலின் சிறப்பு. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், சம்பந்தர்
இவர்களுடன் சூரியனும் ஒரே சன்னிதியில் வீற்றிருக்கிறார். “முகை
மேவும் முதிர்சடையான் கள்ளில் எத்தப் புகழோடு பேரின்பம் புகுதும் அன்றே” என்று
சம்பந்தர் பாடியிருக்கும் இந்த தலத்தில் வழிபட்டால், புகழும், பேரின்பமும்
வந்து சேரும்.
சிருவாபுரியில் ஜிம்மி கார்ட்டரின் ஜோக்குகளுடன் மதிய உணவையும் சேர்த்து சுவைத்து
முடித்து விட்டு நம் பயணம் அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்தது. பழவேற்காடு! அடிக்கடி
கேள்விப்பட்ட பெயர் எனினும், பறவைகள் அதிகம் உண்டு, படகு
சவாரி செய்யலாம் என்பது தவிர பயணம் துவங்க இரு தினங்கள் வரை வேறு விவரம் படிக்கவில்லை. திடீர்
ஞானோதயம் வந்த ஒரு இரவில் உட்கார்ந்து பழவேற்காடு குறித்து இன்டர்னெட்டில் ஆராய்ந்தால்- மயக்கம்
வரும் அளவுக்கு தகவல்கள். பழைய டச்சுக் கோட்டை, ஜெல்டிரியா
கோட்டை, டச்சுக் கல்லறைகள், சின்ன
மசூதியின் சூரிய ஒளி நிழற்கடிகாரம் (சன்-டயல்), 17வது நூற்றாண்டு
அந்தோணியார் கோவில், ஆதிநாராயணப் பெருமாள் கோவில், சமயேஸ்வரர்
கோவில் என்று பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியல் சூப்பர் மார்க்கெட் பில் போல நீண்டு கொண்டே போனது.
பழவேற்காட்டில் முதலில் கால் வைத்த இடம் டச்சுக் கல்லறை. 1609ல் போர்த்துகீசியர்களைத்
தோற்கடித்த பின்னரே டச்சு நாட்டினர் பாளையக்காடு துறைமுகத்தில் குடியேறினர். பழையகட்டா, பாளையகாட்
என்பது பழவேற்காட்டுக்கு டுச்சு நாட்டினர் கொடுத்த பெயர்கள். இந்த
பாளையகாட் பெயரில் தான் புகழ்பெற்ற பாளையகாட் லுங்கிகள் இங்கே நெய்யப்பட்டன, அவற்றில்
இருந்தே மெட்ராஸ் செக்குகள் என்ற உலகப் பிரசித்தி பெற்ற கட்டங்கள் தோன்றின. 1646 முதல் 1777 வரை இந்த 76 கல்லறைகளில் டச்சுக்காரர்கள் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். பிறந்த
இடம், இறந்த இடம் குறிப்பிடப்பட்ட இவற்றில் ராட்டர்டேம், மசூலிப்பட்டிணம், நாகப்பட்டினம்
எனப் பல தொன்மையான நகரங்கள் இடம் பெறுகின்றன. பூக்கள், தேவதைகள், குழந்தைகள், கோட்டை
மாதிரிகள் என விதவிதமான படங்கள் கல்லறைகளில் செதுக்கப் பட்டிருக்கின்றன. பிரம்மாண்டமாய்
நிற்கும் இரு சதுர தூபிகளும் உண்டு. இங்கிருந்து ஒரு ரகசிய சுரங்கம் எதிரில் இருக்கும் இடிந்த
கோட்டைக்குள் செல்வதாக சொல்லிக் கொள்கிறார்கள்.
இடிந்த கோட்டை இருந்த இடத்தில் பெயர்ந்து கிடக்கும் ஒரு சிறிய சுவர் தவிர எதுவும்
இல்லை. 1515ல் கட்டப்பட்ட மாதா தேவாலயம் தேடிச் சென்றால், புனரமைப்பு
என்ற பெயரில், பெரிய கான்கிரீட் காடு ஒன்று சமீபத்தில் நிறுவி இதுவே அது
என்கிறார்கள். மனம் வெதும்பித் தான் போனது. நல்ல
நேரம்- 17வது நூற்றாண்டு அந்தோணியார் தேவாலயம் இவர்களிடம் இருந்து
தப்பிவிட்டது. ஓடுகள் வேய்ந்த கூரையும், அழகிய
மர சன்னல்களுமாய் கவர்கிறது. ஒரு வழியாக மீன்பிடிப் படகு ஒன்றை பேசி அனைவரும் அதில் ஏறி
சவாரி கிளம்பினோம்.
கொசஸ்தலையாறு கடலில் கலக்கும் இடம் ரம்மியமாக காட்சி தருகிறது. வழி நெடுகிலும்
விதவிதமானப் பறவைகள்- கடற்காகம், நீர்க்காக்கை, நாரை, அரிவாள்
மூக்கன் (ஐபிஸ்) என கடற்பறவைகளின் அணிவகுப்பு மனதை மயக்குகிறது. அலைகளற்ற
கடற்காயல், குளிர் காற்று, மணல் திட்டுக்கள் என வித்தியாச
அனுபவம். ஒரு மணல் திட்டில் இறங்கியதும் அனைவருக்குள்ளும் குழந்தைகள்
விழித்துக் கொண்டார்கள். ஓடினார்கள், குதித்தார்கள், மணலில்
படங்கள் வரைந்தார்கள். கடல் பயணத்திலேயே லைட் ஹவுசையும் பார்த்தாயிற்று.
அடுத்து சென்றது- சின்ன மசூதி- அல்-மஸ்ஜிதுல்
முஷர்ரஃப். 1708ல் கட்டப்பட்ட இந்த மசூதி பழவேற்காட்டின் தொன்மையான லெப்பை
இசுலாமியர்களின் அடையாளம். 6ம் நூற்றாண்டில் யூசுஃப் பின் ஹஜாஜின் ஆட்சியின் போது மதினாவில்
இருந்து தப்பி பழவேற்காடு வந்த அரேபியர்கள் இவர்களது மூதாதையர்கள். 1915ம் ஆண்டு
நிறுவப்பட்ட சூரிய நிழற்கடிகாரம் இன்றும் அழகாக இந்த மசூதியில் இயங்குகிறது. மைக்குகள்
இந்தியாவிற்குள் வராத காலங்களில் அதான் ஓத சிறு கோபுரம் ஒன்றும் கட்டி இருக்கிறார்கள்.
அத்தனையும் ரசித்துவிட்டு சென்ற அடுத்த இடம் தான் இந்த பயணத்தில் மிகவும் வேதனைப்
படுத்திய இடம். ஆதிநாராயணப் பெருமாள் கோவில். பதினொன்றாம்
நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அழகிய கோவில் இப்போது பொலிவிழந்து, மரங்களும்
செடிகளும் கொடிகளும் தின்று கொண்டிருக்கும் பரிதாப நிலையில் இருக்கிறது. இந்து
அறநிலையத்துறை, ரீச் என்ற அமைப்பு, பொது
மக்கள், ஒரு வழக்கு என ஆதி நாராயணன் சிக்குண்டு கிடக்கிறார். மரங்கள்
பிணைந்த மண்டபங்கள் அங்கோர்-வாட் கோவிலை நினைவுறுத்துகின்றன. சிற்ப
வேலைப்பாடுகள்- ஜஷ கன்யா (கடற்கன்னி), கருடர், கோதண்ட
ராமர் என கண்ணைப் பறிக்கின்றன. மண்டபத்தின் உட்கூரையில் இருப்பது- ராமர்
பட்டாபிஷேகம் முதல், லவ-குஷர் கதை வரையிலான ராமாயணக் கதை. அத்தனையும்
அழகிய காட்சிகளாக செதுக்கப் பட்டிருக்கின்றன. மாய மானில்
இருந்து, ராவணனின் பத்துத் தலைகள் வரை, அத்தனையும்
கன கச்சிதம். ஆனால் கோவில் இன்னும் எத்தனை நாட்கள் மரங்களைத் தாங்கி நிற்கும்
என்பது தெரியவில்லை. பூஜைகள் எதுவும் நடப்பதாகவும் தெரியவில்லை. கோவில்
வாசல் தோண்டப்பட்டு, கதவு எரிக்கப்பட்டு…வார்த்தைகளில்
வர்ணிக்க முடியவில்லை. தொல்லியல் துறை கையில் எடுத்தால் அன்றி இந்தக் கோவில் இன்னும்
சில மாதங்கள் தாண்டுவது கடினம்.
கனத்த மனதுடனே தான் அடுத்து சமயேஸ்வரர் கோவிலுக்கும் சென்றோம். அங்கும்
இதே நிலை- மரங்களுக்கு நடுவில் உயிர்ப்புடன் இருக்க முயற்சிக்கும் சிவன். ஆனால்
இங்கு பூஜைகள் நடக்கின்றன. வெளிமண்டபத்தின் உட்கூரையில் வித விதமான கதைகள்- மனுநீதி
சோழனும் பசுவும், கண்ணப்ப நாயனார் கதை என அத்தனையும் சிற்பங்களாக. விட்டத்தில்
தலை கீழாக தொங்கும் குரங்கு, பாம்பு நிலவை விழுங்கும் கிரகணம் என காட்சிகள். கோவிலின்
வெளியே சுடுசெங்கலில் கட்டப்பட்ட அழகிய கிணறு- படிக்கட்டு
தனியாக தரைக்கு அடியில் சென்று சேர்வது போல…அத்தனையும்
அழகு. திரும்பும் நேரம் மனதில் தோன்றியது ஒன்று மட்டுமே- காலம்
யாரையும், எதையும் விட்டு வைப்பதில்லை. இருக்கும்
கொஞ்சம் வரலாறு, பண்பாடு இவற்றின் மீதான அக்கறை இல்லையெனில் நாம் இழக்கப்
போவது- நம் வேர்களை.
No comments:
Post a Comment
Hey, just let me know your feedback:)