Monday, 1 May 2017

நம் கிராமம் நம் கதைகள்

ஊரூர் ஆல்காட் குப்பம்

அவள் விகடன், 21.03.17
கோவில்களும் புராதன கட்டிடங்களும் நிறைந்த நகரமாக நம் கண்களுக்குத் தோன்றும் ஒரு நகரம், ஒரு பெரும் சமூக, மானுடவியல் நாற்றங்காலாக, ஒரு நாகரிகத்தின் தொட்டிலாக கண்முன் விரிந்த தினம் அன்று. ஃபிப்ரவரி மாத ஞாயிறு ஒன்றில்ஊரூர் ஆல்காட் குப்பத்தின் வாழும் வரலாற்றுப் பயணம்ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெட்டிவேர் கலெக்டிவ் மற்றும் அர்பன் டிசைன் கலெக்டிவ் இணைந்து நிகழ்த்திய பயணம் குறித்த தகவல் கிடைத்ததும் ஆர்வம் வழக்கம் போல் தொற்றிக்கொள்ள, செல்ல மகளுடன் கிளம்பியாயிற்று. புதிய களம், புதிய மனிதர்கள்- எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற பயணங்களில் ஒரு சிலிர்ப்பும் ஈர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.

நம்பர் 1, எலியட்ஸ் பீச், பெசன்ட்நகர். இது தான் பயணம் துவங்கும் இடம். இடத்தைத் தேடி, வருவோர் போவோரிடம் வழி கேட்டு, நான்கு மணிக்கு சரியாக உள்நுழைந்தால், ஒரு சிறு குழுவாக வெவ்வேறு வயதினர், காதுகளில் ஹெட்ஃபோனுடன். முன்னரே இது ஒரு ஆடியோ டூர் என்ற அறிவிப்பைப் பார்த்திருந்தாலும், சிறு தயக்கத்துடனே ஹெட்ஃபோனை பெற்றுக் கொண்டேன். முதல் ஆடியோ டூர் என்பதால் என்ன எதிர்பார்ப்பது என்பது கூடத் தெரியவில்லை. வெளிநாடுகளின் அருங்காட்சியகங்களில் வெற்றிகரமாக உபயோகிக்கப்படும் ஆடியோ டூர் நமக்கு கொஞ்சம் மிரட்சியையேத் தந்தது- எங்கேனும் தொலைந்துவிட்டால்?

கையில் மீன் வடிவ ரப்பர் ஸ்டாம்ப் குத்திக் கொண்ட்தும், மனதுள் குழந்தையின் குதூகலம் தோன்றிவிட்டது. பயணத்தை வழிநடத்திச் சென்றவர் சமூக ஆர்வலர் திரு. நித்தியானந்த். ஃபிப்ரவரி மாதத்து வெயிலுக்கு இத்தனை வன்மமா என நொந்தபடியே தான் என் பயணம் துவங்கியது. 1880களில் மேடம் பிளவாட்ஸ்கி அவர்கள் தியோசோஃபிக்கல் சொசைட்டிக்கான இடம் தேடும் முயற்சியில் இறங்கியபோதே ஊரூர் குப்பம் இருந்திருக்கிறது. அதன் மூத்த குடிகள் இருந்திருக்கிறார்கள். பனை மரங்களும், தாழையும் மணல் மேடுகளும் நிறைந்த ஒரு சிறிய கடற்கரை கிராமத்தை கண் முன் நிறுத்தி விடுகிறார்கள் பயணக் குழுவினர். நடை பாதையில் ஆங்காங்கே சிறிய அட்டைகளில் அந்த இடங்கள் குறித்த குறிப்பு, “வா”, “நெ”, “தேஎன்ற எழுத்துக்களுடன் வரவேற்றன. கடல்சார் வாடைக் காற்று, நெய்தல் நிலம், அவர்கள் தெய்வமான தேசம்மா என்பதை அவை குறித்தன.

முதலில் சென்றதுகன்னி கோவில்இருந்த இடம். கடலில் மரித்த வெள்ளைக்காரர்களின் ஆவிகள் நடமாடிய இடம் என்றும், ஊர் எல்லையில் பேய் பிசாசுகளை விரட்டிக் கொண்டுவந்து சேர்க்கும் இடம் அது என்று சொல்லவும், கொஞ்சம் பீதியுடனும், கிராமத்து மக்களின் வெள்ளந்தி மனதை நினைத்து ஒரு சிறு புன்னகையுடனும் நடந்தோம். 1965-ல் பெசன்ட் நகர் நிறுவப்பட்ட காலத்தில், இங்கே அரசால் கட்டித் தரப்பட்ட குவிந்த கூரை கொண்ட கூண்டு வீடுகள் இரண்டு கான்கிரீட் குவியலுக்கு நடுவே, இன்றும் கம்பீரமாக நிற்கின்றன

அடுத்து நாம் சென்றது எல்லையம்மன் கோவில். இந்த எல்லையம்மன் கதை சுவாரசியமானது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஒரு மீனவர் வலையில் ஒரு நாள் சிக்கியது பெரிய கல் மட்டுமே. கோபம் அடைந்த மீனவர், அதை கடலில் தள்ளிவிட்டு மீண்டும் வலையை வீச, இம்முறையும் அதே கல் சிக்கியது. பல முறை வலை வீசியும், அதே கல் மீண்டும் மீண்டும் சிக்கியதால் வியப்படைந்த மீனவர், அதை படகின் மூலையிலேயே வைத்தார். சூரிய ஒளி பட்டு பிரகாசமாக ஜொலித்தது கல். இப்போது மீண்டும் வலையை வீச, வலை நிறைய மீன்கள். கரைக்கு வந்த அந்தக் கல் எல்லையம்மனாக உருவெடுத்தது. அதை சுற்றிய கோவில் கொஞ்சம் கொஞ்சமாக உருப்பெற்றது. இப்போது ஊரூரின் அடையாளமாகவே மாறிப்போனது எல்லையம்மன் கோவில். உள்ளே சிம்ம வாகனம், மூஞ்சுறு வாகனம், குதிரை வாகனங்கள் அணிவகுத்து நிற்க, ஒரு குறும்படம் திரையிடப்படுகிறது. ஊரூரின் சுந்தரமூர்த்தி ஐயா, பாளையம் ஐயா இவர்களின் கிராமம் குறித்த குறிப்புக்களும், ஏலேலோ ஐலேசா பாடலும் ஊரின் மீதான நம் ஈர்ப்பை அதிகப்படுத்துகிறது.
கோவில் வளாகத்தில், 1965ல் கிராமத்தின் வடிவமைப்பை தத்ரூபமாகக் காட்டும் மாதிரி ஒன்று அசரடிக்கிறது. ஊரூர் கிராமவாசியும், மீனவர் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகியும், ஊரூர் ஆல்காட் குப்ப விழாவின் தன்னார்வல அமைப்பாளர்களில் ஒருவருமான சரவணன், 65களில் ஊரூரின் நீர் நிலைகள், வீடுகள், கோவில்கள் குறித்து விளக்கினார். அவற்றில் எதுவும் இன்று இல்லை என்பதே பெரும்சோகம். அவர்கள் வணங்கும் முனி கோவில் மட்டும் இன்னமும் பெசன்ட்நகரின் இறுக்கத்தில்  மறைந்திருக்கிறது. அருணாசல செட்டியாரின் மாளிகை இருந்த இடம் இன்றைய சான்சலர் அப்பார்ட்மென்டாக மாறியிருக்கிறது.

நகரமயமாதலின் பேய்க்கரங்கள் ஆழ்துளை கிணறுகளை நிறுவிய வேகத்தால், ஊரூரின் நிலத்தடி நீர் கடல் நீரை ஒத்தே உவர்ப்பாக இருக்கிறது. சமுதாயக்கிணறு இன்று இல்லை, குளங்கள் இல்லை, கடல் நீரை உள்வாங்காமல் தடுக்கும் இயற்கை மணல் மேடுகள் இல்லை. ஊர்கூட்டம் போட்ட திறந்தவெளி குப்பைமேடாக காட்சி தருகிறது.

ஊரூர் வீடுகளின் வாயில்களில் நீங்கள் காணும் முதல் காட்சி- அவர்கள் வணங்கும் தெய்வமான தேசம்மா, தேசப்பா. மஞ்சளும், குங்குமமும் பூசி, பூசை செய்த செங்கற்கள் இரண்டு வீடுகளின் முன் அழகாக காட்சி தருகின்றன. அவை இல்லாத வீடுகளில், சுவற்றில் வட்டமாக மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து தேசம்மா, தேசப்பாவை வழிபடுகிறார்கள். குப்பத்துப் பெண்களின் காவல் தெய்வமாக வணங்கும் தேசம்மாவிற்கு குழந்தை பிறந்த மூன்று, ஐந்து மற்றும் ஒன்பதாம் மாதங்களில் சிறப்பு பூசை செய்து வணங்குகிறார்கள்
தன்னார்வலர்கள் சிலரது வழிகாட்டுதலால், மூன்று மாதங்கள் புகைப்படக் கலை பயிற்சி பெற்ற ஊரூரின் சிறுவர், சிறுமியரின் கைவண்ணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒரு தெருவெங்கும் அணிவகுத்து அழகூட்டுகின்றன. விழிகள் விரிய பார்த்தபடி நகர்கிறோம். குழந்தைகளின் உலகம் தான் எத்துணை அழகானது? கடலை ஒட்டிய அடுத்த தெருவுக்குள் நுழையும்போது தான் நம்மைத் தாக்குகிறது வடிகாலற்ற தெருக்களின் கழிவுநீர் வாடை. இதுவரை வெரும் அழகியலோடு, வாழ்வுமுறை நடையாக இருந்த பயணம் சட்டென ஒரு விழிப்புணர்வு பயணமாக பரிமாணம் மாறுகிறது. கூப்பிடு தொலைவில் பளபளக்கும் பெசன்ட்நகர் இருந்தும், ஊரூரின் வீதிகளில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. அரசு இயந்திரத்தின் மெத்தனம் அயர்வையே நமக்குத் தருகிறது. ஊரூரின் 50%க்கும் அதிகமான பெண்களுக்கு கழிவறை வசதி இல்லை.

தெருக்களில் மகிழ்ச்சியுடன் பெண்கள் அமர்ந்து பணம் வைத்து சிறு பிளாஸ்டிக் பந்துகளை உருட்டி விளையாடுகிறார்கள். தாயம் விளையாடும் பெண்கள் சிலர். “ஃபோட்டோ எடுத்துக்கோவாஎன்ற கனிவான அழைப்பு வேறு! கொஞ்சம் காலார பின் தங்கிய நம்மை வளைத்தது ஒரு போலீஸ் ஜீப். “இங்கெல்லாம் ரொம்ப நேரம் நிக்க கூடாதுமோசமான இடம்என்ற எச்சரிக்கையுடன் நகர்கிறார் ஒரு உயர் அதிகாரி. “மோசமான இடம்என்ற வர்ணனைக்கு அங்கே எதுவுமே இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மீனவ குப்பங்களின் மீதான இந்த பொதுப்புத்தி மாறவே இந்த பயணம், இந்த ஊரூர் ஆல்காட் குப்பம் விழாஅடுத்து சென்றது கடலை ஒட்டிய ஒரு வீட்டின் மொட்டை மாடி. ஊர்த் தலைவர் திரு பாளையம் அவர்களின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட கடலடி அடையாளங்கள் அழகாக சிலைடுகளில் காட்சியமைக்கப் பட்டிருக்கிறது. மணல் மண்டிய கடலடிப் பிரதேசங்கள்சேர்எனவும், பாறைகள் நிறைந்த பகுதிபார்எனவும் இவர்களால் குறிப்பிடப்படுகிறது. வண்டிப்பார், ஈர்க்குழிசேர், கொடுமாச்சேர் என கடலடி அடையாளங்களை அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். நம் கண்முன் நீலமாக ஒரே சீராக விரியும் கடலுக்கடியில் எங்கெங்கு என்னென்ன மீன்கள் கிடைக்கும் என்பது முதற்கொண்டு துல்லியமாக குறித்திருக்கிறார்கள். அதிலும், கடலுக்கடியில் நொறுங்கி விழுந்த விமானம், காந்தவிசைப் பொருள் ஒன்று, நீருக்கடியில் கிணறு என்று செவி வழியாக இவர்கள் மூதாதையரிடம் கேட்டு, கற்ற கடல் பாகங்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு.

கடலூர் முதல் திருவள்ளூர் வரை நூற்றுக்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்கள் ஊரூருடன் தொடர்பு கொண்டுள்ளன. திருமண பந்தத்தின் மூலம் வழமையாக பெண்கள் இடம்பெயர்வது போல், இங்கே ஆண்களும் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். ஆனால், மீன் பிடிப்பதில் மட்டும் இவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. கம்பிகளால் வடிவமைக்கபட்ட ஒரு மாதிரி கொண்டு அவர்களது திருமண உறவுகளை விளக்கினார் அர்ச்சனா சேகர்


கடற்கரையில் இறுதி நிகழ்வு- மீன்பிடி உபகரணங்கள் விளக்கம்- நாற்பது பேர் இருந்தால் மட்டுமே உபயோகிக்கக் கூடிய பெரிய மோடா வலை, கடமான் வலை, வஞ்சிரம், வாவல், மற்றும் சீலா வலைகள், நண்டு வலை என்று வலைகள் குறித்தும் கொஞ்சம் கற்றுக் கொண்டோம்.

பயணம் முடிந்து தளர்நடையாக வெளிவருகிறோம். ஒருபுறம் அசுரத்தனமாக ஆக்டோபஸ் கரங்கள் கொண்டு ஊரைத்தின்னும் நகரம். மறுபுறம் ஆக்ரோஷமாக குப்பைகளையும் கழிவையும் விழுங்க முடியாமல் துப்பும் கடல். இவை இரண்டுக்கும் நடுவே தனித் தீவாக ஊரூர். ஊரூரின் கலை விழா மூலமாக மூன்று ஆண்டுகளாக கர்னாடக இசையை ஊரூருக்குள் கொண்டு சேர்த்து, அதன் மூலம் உயர் வகுப்பினரது இசையாக மட்டுமே அறியப்பட்ட கர்னாடக இசையையும், பாமரனின் பறையிசையையும் ஒன்றிணைத்து ஒரே மேடை ஏற்றிய திரு டி எம் கிருஷ்ணாவின் பாடல் வரிகள் நெஞ்சுக்குள் நிழலாடுகின்றன. “வளர்ச்சி, வேலைவாய்ப்பு எல்லாம் வெட்டி சாக்கு, ஏரி வித்தவனுக்கு ஏரி வெறும் பொறம்போக்குஅப்போ நீயும் நானும் என்ன கணக்குஅட நீயும் நானும் பொறம்போக்கு…”

No comments:

Post a Comment

Hey, just let me know your feedback:)