Monday, 1 May 2017

சென்னையை ஆராயும் பிரெஞ்சுப் பெண்!

அவள் விகடன், 07.03.17.கரின் ஹார்ட். இருபத்தைந்து வயதே ஆன இளம் ஃப்ரெஞ்சுப் பெண். சென்னை நகரையும், அதன் தொன்மையையும், நதிகளையும், கரையோரத்து மக்களையும் ரசித்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். விரல்நுனியில் சென்னை குறித்த வரலாற்றுக் குறிப்புகளையும், நதியோர மானுடவியல், சமூகவியல் பரிணாம வளர்ச்சி குறித்த தகவல்களும் வைத்திருக்கும் ஆச்சர்ய மனுஷி. ஒரு பிற்காலைப் பொழுதில் கரினுடன் நாம்:

உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் கரின்பிறந்தது, வளர்ந்தது, குடும்பம், உங்கள் குழந்தைப் பருவம் குறித்து…?
பிறந்தது ஃப்ரான்சின் நார்மண்டி கடற்கரையோரம் உள்ள பிரிட்டேனி பகுதியின் சிறு கிராமம். அம்மா அப்பா இருவரும் கணிணிப் பொறியாளர்கள். ஒரு தம்பி உண்டு. மிகவும் சிறிய அழகான கரையோரக் கிராமம் என் ஊர். எப்பொழுதும் நிறைய சுற்றுலாப் பயணிகளால் நிறைந்திருக்கும். பதினாறு வயது வரை அங்கேயே வளர்ந்தேன். அதன் பின் எனக்கான தேடல் துவங்கியது. சுதந்திரமாக தனித்து வாழ ஆசைப்பட்டேன். நிறைய பயணப்பட விரும்பினேன். என் அத்தை ஒருவர் சைனாவில் இருந்தார். அவர் அங்கிருந்து வந்து சொல்லும் கதைகள் தூர தேசங்கள் மீதான ஈர்ப்பை அதிகரித்தன. பதினாறு வயதுக்குப்பின் என்னை சொந்த ஊரில் இருந்து இரண்டு மணி நேரப் பயண தூரத்தில் இருந்த வேறொரு ஊரின் பள்ளி விடுதியில் சேர்த்தார்கள். இப்பொழுது நிறைய பயணிக்கிறேன். தாய், தந்தை மீதான பாசத்தை அதிகமாக உணர்கிறேன். அங்கேயே இருந்திருந்தால் கூட இத்தனை பரிவும் பாசமும் குடும்பத்தின் மீது வந்திருக்குமா என்பது தெரியவில்லை. (சிரிக்கிறார்…)
என்ன பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்தீர்கள்? மேல்படிப்பு என்ன படித்தீர்கள்? எந்த பாடப்பிரிவு உங்களை மிகவும் ஈர்த்தது?
உங்கள் ஊரைப் போலத்தான் எங்கள் ஊரிலும்! சமூகவியலும், மானுடவியலுமே என் மனதுக்குப் பிடித்தவை. ஆனால், அதை விட பொறியியல் படித்தால் வேலைவாய்ப்பு உறுதி என்று தாயும், தந்தையும் வற்புறுத்தியதால், டூர்ஸ் நகர பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். முதலில் அதில் மனம் லயிக்கவில்லை. முதல் இரண்டு ஆண்டுகள் இயற்பியலும், அடுத்த இரண்டு ஆண்டுகள் கணிதமும் படித்தாக வேண்டிய கட்டாயம். நகர்ப்புறத்திட்டமிடல் படிப்பின் மீது கொஞ்சம் ஆர்வம் வந்தது. நகர்ப்புறத்திட்டமிடல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூகவியல், மானுடவியல் குறித்து படிக்க ஆசைப்பட்டேன். அதிகம் பயணப்பட அது உதவும் என நம்பினேன். முதலாம் ஆண்டிலேயே மாணவர் பறிமாற்றத் திட்டம் மூலம் பயணப்பட விரும்பினேன். ஐரோப்பாவிலேயே அதிக தொலைவில் நார்வே வரை மட்டுமே செல்லலாம் எனத் தெரிந்தது. இரண்டாம் ஆண்டில் தான் இந்தியா வர வாய்ப்புக் கிட்டியது. ஆர்கஸ் எனும் மாணவர் பரிமாற்றத் திட்டம் இந்தியா மற்றும் ஃப்ரெஞ்சு அரசுகளுக்கிடையே இருந்தது தெரிய வந்தது. அதில் 50% உதவித்தொகை கிடைக்கும் என்றதும் கிளம்பத் தயாராகிவிட்டேன்.
இந்தியா மீதான பற்று எப்படி வந்தது? எப்படி சென்னையைத் தேர்ந்தெடுத்தீர்கள்? எவ்வளவு காலம் இங்கே இருக்கிறீர்கள்? இன்னும் இருக்க ஆசைப்படுகிறீர்கள்?
அதிக தூரம் பயணிக்க வேண்டும், புதிய நாடுகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தான் காரணம். அப்போது ஃப்ரஞ்சு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த திரிபுரசுந்தரி அறிமுகமானார். மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி எனும் அமைப்பை தற்போது வழிநடத்திக் கொண்டிருக்கிறார் அவர். அவரது வழிகாட்டுதலும், நதிகள் மற்றும் மக்களுக்கிடையேயான உறவு குறித்து ஆராய அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு வழங்குவது தெரிந்ததும், சென்னை வந்தேன். நான்கு ஆண்டுகளாக சென்னையில் இருக்கிறேன்- இரண்டு ஆண்டுகள் பொறியியல் படிப்புக்காக, அதை முடித்ததும் இரண்டு ஆண்டுகள் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக. என் மாணவர் விசா 2018 துவக்கத்தில் முடிவடைகிறது. அதன்பின் என்ன செய்வது என இன்னும் யோசிக்கவில்லை. சைக்கிளில் உலகை சுற்றி வர ஆசைப்படுகிறேன். நான் நிறைய கனவுகள் காண்பவள். (சிரிக்கிறார்…)
உங்கள் முதல் சென்னைப் பயணம் பற்றி சொல்லுங்களேன்..இன்றைய சென்னை உங்களைக் கவர்ந்ததா?
இந்தியா வருவதற்கு முன்னரே அது குறித்து நிறையப் படித்துவிட்டேன். பயண நூல்கள் படித்தேன். யானைகளும், பாம்புகளும், பாம்பாட்டிகளும் நிறைந்த நாடு என கற்பனை செய்திருந்தேன்! (சிரிப்பு) இந்தியா மிகவும் மாசு நிறைந்த, அழுக்கான நாடு என்றே படித்திருந்தேன். ஆனால் இங்கு வந்தால், எல்லாமே தலைகீழ்! சென்னையும், அதன் மக்களும் மனதிற்கு மிகவும் பிடித்துப் போனார்கள். அன்பும், கருணையும் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். வலிய வந்து உதவுகிறார்கள். ஆய்வு செய்ய சென்னையும், அதன் நதிகளும், அவை சார்ந்த நாகரீக வளர்ச்சியும் என்ற தலைப்பையே தேர்ந்தெடுத்தேன்.
ஏன் இதைத் தேர்ந்தெடுத்தீர்கள்? சென்னையின் அடையாறு மற்றும் கூவம், இரண்டில் உங்களைக் கவர்ந்த நதி எது?
அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர்வளத் துறையில் கிடைத்த உதவித்தொகை மற்றும் சமூகவியல் எனக்குப் பிடித்த பாடம் என்பதாலும் தான். கூவம் நதியை விட அடையாற்றை மிகவும் பிடிக்கும். கூவத்தின் கரையில் அதிகம் கோவில்களே எனக்குக் காணக் கிடைத்தன. அடையாறு மாறுபட்ட பல கோணங்களை அளித்தது
சென்னையின் நதிகள் குறித்த ஆய்வில் உங்களை மிகவும் பாதித்தக் கதைகள் ஏதேனும் உள்ளதா?
ஆம். சைதாப்பேட்டையின் தோபிகாட். அடையாற்றின் கரையில் அமைந்த சென்னையின் இரண்டாவது பெரிய துணி துவைக்கும் இடம் அது. நான் வந்த புதிதில் அங்கே நேரில் சென்று படங்கள் எடுத்திருக்கிறேன். ஆனால் இன்று அது இல்லை. காற்றில் கரைந்தாற்போல ஆகிவிட்டது. 2015 பெருவெள்ளத்துக்குப் பிறகு அங்கிருந்தவர்களை செம்மெஞ்சேரியில் குடியமர்த்தியது அரசு- வெள்ளத்தை சுட்டிக்காட்டி. அவர்களுக்கு போதிய வாழ்வாதாரம் எதுவும் தரவில்லை, அதற்கு வழியும் இல்லை. கடன் வாங்கி, வட்டி கட்ட முடியாமல் திணறுகிறார்கள். பெண்கள் அருகே இருக்கும் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வேலை தேடிக்கொள்கிறார்கள். ஆண்கள் நிலை மிகவும் மோசம். கடன் வாங்கி திருப்பித் தரமுடியாமல் காணாமல் போகிறார்கள். கெட்ட வழிகளில் செல்கிறார்கள். அவர்களைக் குறித்த அக்கறை யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இருக்கத்தான் இடம் கொடுத்தாயிற்றே என்று அரசு எண்ணுகிறது. ஆனால் வாழ வழி? ( மவுனமாகிறார்)
மொழி என்பது உங்களுக்குத் தடையாக இருந்திருக்க வேண்டுமே? எப்படி சமாளித்தீர்கள்? தமிழ் கற்றுக்கொண்டது எப்படி?
மொழிகள் மீது சிறுவயது முதலே கொஞ்சம் ஆசை உண்டு. மாண்டரின், ஸ்பானிஷ், போர்த்துகீசியம், ஃப்ரெஞ்சு, ஆங்கிலம் வரிசையில் இப்போது தமிழும் கற்றுக்கொண்டேன். யாரிடம் என்று நினைக்கிறீர்கள்? ஆட்டோக்காரர்களிடம். முதலில் கற்றது- மூன்றே வாக்கியங்கள்- “லெஃப்டுக்காப் போ, ரைட்டுக்காப் போ, ஸ்டிரைட்டாப் போ…” (சிரிக்கிறார்) முதலில் சிரமமாக இருந்தது, இப்போது கற்றுக் கொண்டுவிட்டேன். போர்டுகளைப் படிக்க முடியும், மற்றபடி ஆங்கிலத்தை வைத்து சமாளித்துக் கொள்கிறேன்.
சைதாப்பேட்டை ஹெரிட்டேஜ் வாக் தான் நீங்கள் முதலில் தனியாக ஏற்று வழிநடத்திய பாரம்பரிய நடை. நாங்கள் நிறைய பேர் கலந்து கொண்டோம். இதன் மீது ஆர்வம் எப்படி வந்தது? எப்படி தகவல் சேகரிக்கிறீர்கள்? சமூக வலைதளங்களின் உதவி உங்களுக்கு இருக்கிறதா?
திரிபுரசுந்தரி மூலமாக முகநூலில் நிறைய பாரம்பரியம் சார்ந்த குழுக்கள் இயங்கி வந்ததை அறிந்தேன். முதலில் சேர்ந்தது கூவம்- ஒரு கலாச்சார மேப்பிங் குழுவில். எழுத்தாளர் மற்றும் வரலாற்று ஆர்வலர் வெங்கடேஷ், பத்மப்பிரியா போன்றோரது நட்பால், இது போன்ற ஆன்லைன் குழுக்களில் இணைந்து கொண்டேன். நிறையக் கற்றுக் கொண்டேன். கூவம் நதியை முற்றிலுமாக அலசி ஆராய்ந்து அதன் கரையில் உள்ள சரித்திர மற்றும் சமூகவியல் முக்கியத்துவம் கொண்ட கோவில்களையும், பிற கட்டிடங்களையும், மக்கள் வாழ்க்கை முறையையும் இரண்டு ஆண்டுகளாகப் பதிவு செய்து வந்தது அந்தக் குழு!  அதன் பின் துவங்கப்பட்ட அடையாறு- கலாச்சார மேப்பிங்க் குழுவிலும் இணைந்து கொண்டேன். கடந்த ஒரு வருடமாக இந்தக் குழுவும் தீவிரமாக இயங்கி வருகிறது. வேறுபட்ட பின்னணியைக் கொண்ட நண்பர்கள் அடையாற்றால் இணைக்கப்பட்டு அதன் கரையோரத்தின் மானுடவியல், சமூகவியல், வரலாற்றைப் பதிவு செய்து கொண்டிருக்கிறோம். ஒரு நடை பயணம் என்றால், மூவர் அல்லது நால்வர் நடந்து சென்று ரெக்கே செய்தபின், இரண்டு மணி நேரத்துக்குள் பார்க்க முடியும் இடங்களை கணித்து விடுகிறோம். ஒத்தக் கருத்துடையவர்கள் இருப்பதால், எங்கள் பணி சுலபமாகிறது. இதுவரை மூன்று-நான்கு நடைகளும், ஒன்றிரண்டு பயணங்களும் இதுவரை மேற்கொண்டிருக்கிறேன்.
நானே ஒரு கலாச்சார நடையை ஏற்று நடத்தியது சைதாப்பேட்டையைச் சுற்றித்தான். ஆர்மீனியரான க்வாஜா பெட்ரஸ் உஸ்கான் கட்டித்தந்த மர்மலாங்க் பாலம் (தற்போது மறைமலை அடிகள் பாலம்), அதன் அருகே உள்ள அவர் பொறித்தக் கல்வெட்டு, இந்தியாவின் முதல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, (இங்கு தான் டாக்டர் இராதாகிருட்டிணன், ஆர். வெங்கடராமன் ஆகியோர் பயின்றனர்), காரணீஸ்வரர் மற்றும் சவுந்தரேஸ்வரர் கோவில்கள் என்று வித்தியாசமான இடங்களைத் தேடிச் சென்று காண்பித்து விளக்கியது மகிழ்ச்சியாக இருந்தது.
சென்னை நகரம் உங்களை சரியாக நடத்தி இருக்கிறதா? ஒரு பெண், அதிலும் வெளிநாட்டவர் என்பதால் ஏதேனும் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறீர்களா?
(கனத்த மவுனத்துக்குப் பின் தொடர்கிறார்) பொதுவாகவே சென்னைவாசிகள் அன்பானவர்கள். ஆட்டோ டிரைவர்கள், “வீட்டுக்கு வாங்க, டீ சாப்பிடுங்கஎன்பது வரை உபசரிக்கிறார்கள். ஒரு சில கசப்பான அனுபவங்களும் உண்டு. நகரத்து பேருந்துகளில் பாலியல் தொல்லைகள் அதிகம். அதற்குப் பயந்தே ஸ்கூட்டி ஒன்று வாங்கி இருக்கிறேனாக்கும்! காலில் மெட்டி வேறு போட்டுக்கொள்கிறேன். “என் பாய்-ஃப்ரெண்டு வீட்டில் இருக்கிறான்”, என்று ஆட்டோக்காரர்களிடம் கதை சொல்லிக் கொள்கிறேன்! (சிரிக்கிறார்)
வெளிநாட்டுப் பெண்கள் என்றாலேஈஸி-கோயிங்என்ற கருத்து இங்கே வேரூன்றிவிட்டது. ஒரு முறை தஞ்சையில் இருந்து சென்னை வந்த இரயிலில் உடன் வந்த ஃப்ரெஞ்சுப் பெண் ஒருவரை இரயில்வே ஊழியரே பாலியல் தொல்லை செய்தார். எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மொழி ஒரு பெரிய பிரச்சினை. வெளிநாட்டவர் எதற்கும் தயாராக இருப்பார்கள் என்ற எண்ணத்தை மாற்றுவது கடினமாகத் தான் இருக்கிறது. ஆனால் எல்லா கலாச்சாரத்திலும் இந்த பொதுப் புத்தி நிலவுகிறது. ஃப்ரான்சையே எடுத்துக் கொள்ளுங்களேன்எங்கள் பல்கலைக்கழகத்திலேயே, ப்ரேஸில் நாட்டைச் சேர்ந்த பெண்கள் என்றால், ஆண்களின் முகமும், நடவடிக்கையும் அப்படியே மாறிவிடும். மரியாதை கொஞ்சமும் இருக்காது. அது போலத்தான் இங்கேயும்நாட்டின் தவறு அல்ல இது. ஆண்களின் பொதுப்புத்தி! அதே இங்கே வயது முதிர்ந்தோர் என்றால் பரவாயில்லை. மேட்டுப்பாளையத்தில் இருக்கும் தோழியை சந்திக்க நேரும் போதெல்லாம், அங்குள்ள முதியோர் என்னை மிஸ்ஸிஎன்றே அழைக்கிறார்கள்! அந்தக் காலத்து துரைசானிகளை அழைத்தப் பழக்கம் போலும்!
ஒரு பெண்ணாக தனிமையானப் பயணங்கள் மேற்கொள்வது கடினமாக இல்லையா? இந்த பயணங்களில் என்ன கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்? இங்கிருந்து என்ன செய்தியை ஃப்ரான்சுக்கு கொண்டுசெல்வீர்கள்?
பயணங்களை நான் மிகவும் விரும்புகிறேன். இந்தியாவிலேயே இமயமலை, அந்தமான் தீவுகள், கேரளா, மும்பாய், தில்லி போன்ற இடங்களுக்கும், சைனா, மொரோக்கோ, அர்ஜென்டீனா, ப்ரேசில், தாய்லாந்து முதலிய நாடுகளுக்கும் தனியாகப் பயணித்து இருக்கிறேன். வாழ்க்கையைப் புதிய பரிணாமத்தில் பார்க்க எனக்கு இந்தப் பயணங்கள் உதவுகின்றன. மன தைரியமும், துணிச்சலும், ஆன்மீகத் தேடலும் இது போன்ற பயணங்கள் கற்றுத் தருகின்றன. நான் இயல்பிலேயே ஒரு ஏதிஸ்ட். கடவுள் இல்லை என நம்புபவள். மதத்தின் வாயிலாக நடக்கும் அடக்குமுறைகளை வெறுக்கிறேன். முக்கியமாகப் பெண்களைத் துன்புறுத்த கலாச்சாரம் என்பது ஒரு போலிக்காரணம் ஆகிவிட்டது! கல்ச்சர் இஸ் நாட் அன் எக்ஸ்க்யூஸ்! ஆனால் இமய மலைக்கு- பத்ரினாத், கேதர்நாத் சென்று வந்த பிறகு, நான் பேந்திஸ்ட்! (இயற்கையில் கடவுளைக் காணும் முறை) பயணங்கள் உண்மையில் நான் யார் என்பதை எனக்கு உணர்த்துகின்றன. வந்தாரை வரவேற்பதும், அனைவரையும் அன்புடன் நடத்தவும் எனக்கு இந்தியாவே கற்றுத் தந்தது. இதை நிச்சயம் ஃப்ரான்சுக்கு படிப்பினையாக எடுத்துச் செல்வேன்.

டிமானடைசேஷன் சமயத்தில் இன்னலுக்கு ஆளானீர்கள் என கேள்விப்பட்டேன். விரிவாக சொல்ல முடியுமா?
அப்போது கொஞ்சம் சுதாரித்துத் தான் இருந்தேன். நவம்பர் 8க்குப் பின் மூன்று வாரங்கள் கழித்து ஒரு நிகழ்ச்சிக்காக பாண்டிச்சேரி செல்ல வேண்டி இருந்தது. வங்கியில் பணம் எடுக்க முடியவில்லை, வெறும் நூற்றுப் பதினைந்து ரூபாயில் பயணம் கிளம்பியாயிற்று. பேருந்துக்கு நூறு ரூபாய் கொடுத்து நிமிர்ந்தால், கையில் இருந்த பதினைந்து ரூபாய்க்கு செல்ல வேண்டிய இடத்துக்கு ஒரு ஆட்டோ கூடக் கிடைக்கவில்லைஏடிஎம் எதுவும் வழியில் இல்லை. நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி சமாளித்தேன். கார்டைத் தேய்த்து உண்ண முடிந்த கடைகளில் மட்டுமே சாப்பிட்டேன். பின்னர் நண்பர் ஒருவரின் உதவியுடன் கொஞ்சம் பணம் கையில் கிடைத்து சென்னை வந்து சேர்ந்தேன்! கொஞ்சம் பயங்கரமான அனுபவம் தான் அது!

உங்களைப் பொறுத்தவரை, சென்னையின் பாதுகாக்கப் படவேண்டிய புராதன சின்னம் எது? அதை நாம் சரியாகப் பேணி இருக்கிறோமா? அல்லது அதை பாதுகாக்க இன்னும் என்ன செய்ய வேண்டும்?
ஒன்று அல்ல. பல. சென்னையின் நீர்நிலைகள். இங்கு பலருக்கு அடையாறு என்ற நதி இருப்பதே தெரியவில்லை. பக்கிங்ஹாம் கால்வாயைத் தெரியவில்லை. சென்னையில் எங்கு நீர் இருந்தாலும் அதுகூவம்என்றே அழைக்கப் படுகிறது! சென்னை நகரத்துமாஸ்டர் ப்ளானில்அடையாறு நதிரெக்ரீயேஷன் ஏரியா” (பொழுதுபோக்கு இடம்) என்றே குறிப்பிடப் படுகிறது. அப்படியானால் அதன் முக்கியத்துவம் என்ன, அதன் நிலை என்ன என்பது உங்களுக்குப் புரிகிறது அல்லவா? நீர்நிலைகளை பாதுகாத்தல் அவசியம். இப்போது செய்வது நிச்சயம் பத்தாது!
இந்த ஆய்வை முடித்ததும், ஆய்வறிக்கை கொண்டு என்ன செய்வதாக திட்டம்? அரசுக்கு அதைக் கொண்டு செல்வீர்களா? அதன்பின் என்ன செய்யப் போகிறீர்கள்?
கண்டிப்பாக! நான் செய்த ஆய்வு, அதன் முடிவுகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன். நீர்நிலைகள் மாசுபடுவது பற்றியும், அவற்றை பாதுகாப்பதின் முக்கியத்துவம் குறித்தும் தகவல் பகிர்வேன். ஆனால் அதன் பின், அதை அரசு கையில் எடுத்துக் கொண்டு ஆவன செய்யும் என்பதை நான் நிச்சயிக்க முடியாதே! செய்தால் நல்லதுஇதை முடித்த பின், மேரற்கொண்டும் ஆய்வு செய்வேன். சென்னையின் நதியையும், வேறு நாட்டின் நதி ஒன்றையும், அதன் கரையோர நாகரீக பரிணாம வளர்ச்சியையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ய ஆசை!
ஆய்வு தவிர மற்ற நேரங்களில் என்ன செய்கிறீர்கள்? சென்னை ஒரு நடுத்தரமான நகரம். ஐரோப்பா அளவுக்கு பரந்த கொள்கையுடைய நகரம் அல்லவே?
இங்கு வந்த முதல் வருடம் முழுக்க சுற்றியாயிற்று. ஒரு இடம் மிச்சம் வைத்ததாக நினைவில்லை. ஆனால் இப்போது ஹெரிட்டேஜ் நடைகள், பயணங்கள் என்று சுவையான நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. அவை புது விதமான அனுபவத்தைத் தருகின்றன

இந்தியப் பெண்களுக்கு நீங்கள் என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?
சுதந்திரமாக இருக்கப் பழகுங்கள். நிறைய பயணப்படுங்கள். வாழ்க்கை குறித்த தேடல் உங்களிடம் எப்பொழுதும் இருக்கட்டும்!

நன்றி தோழியே! அறிவை வளர்ப்போம். சிறகுகள் விரிப்போம். வானம் வசப்படட்டும்!


No comments:

Post a Comment

Hey, just let me know your feedback:)