Monday, 1 May 2017

ஒரு நதி ஒரு வாழ்க்கை


அவள் விகடன், 21.02.2017.
 
சென்னை என்பது பலருக்கு வெறும் கார்கள் பறக்கும் கான்கிரீட் காடு. சிலருக்கு, கனவுகளின் நகரம், தொன்மையின் நுழைவாயில். சில ஆண்டுகளாக முகநூலில் அறிமுகமான நட்புக்கள் சிலரோடு  வரலாற்றுக் குழுக்களில் இணைந்து வாசித்தும், படித்தும் கொண்டிருக்கிறேன். பணியை விட்டு விடுதலையாகி சென்னை வந்ததும் வரலாறும், கலாச்சாரமும் கைபிடித்து எங்கெங்கோ இழுத்துச் சென்றது. அப்படி ஒரு குழு தான் 477 உறுப்பினர்களைக் கொண்ட அடையாறு- ஒரு கலாச்சாரப் படமிடல்”. ஏற்கனவே கூவம் நதியை அழகாக மேப் செய்த வெங்கடேஷ் குழுவினர், அடையாறையும் அதன் பல பரிமாணங்களையும், நதியை சுற்றிய நாகரீக வளர்ச்சியையும், கடந்த ஆண்டு முதல் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு குளிர் காலையில் நடுங்கியபடியே டாக்சி பயணம். ஆறரை மணிக்கு நான் எல்லோரையும் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை போர் நினைவிடத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. இரண்டு வேன்களில் சுமார் இருபது பேர் அன்றைய தினம்  நந்தம்பாக்கம், கோவூர், மணிமங்கலம் மற்றும் பல்லாவரம் சுற்றிப் பார்ப்பதாகத் திட்டம்.
பல அடி உயரமுள்ள பர்மா காலனி முனீஸ்வரர் இருப்பது அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலின் வெளியே. சுமார் நாற்பது வருடங்களுக்கு முன், சுடுமணலால் செய்யப்பட்ட முனீஸ்வரர் கையில் எட்டு அடி அரிவாளுடன், பெரிய விழிகளை உருட்டியபடி அடையாற்றின் இக்கரையில் அமர்ந்திருக்க, அவரது நேரெதிரே சாக்கடை அடையாற்றில் கலந்து கொண்டிருக்கிறது. முனீஸ்வரரின் சிலையினடியில் ஒரு புத்தரும் சிரிக்கிறார், இன்னொருபுறம் தாராசுரத்து சிற்பங்களை நகல் எடுக்க முயன்று, இதை செய்தவர் தோற்றிருக்கிறார்.

அடுத்து சென்றது நவக்கிரஹ தலங்களில் ஒன்றான கோவூர். போரூர்-குன்றத்தூர் சாலையில், சிறிய பிரிவில் இருக்கிறது கோவூர். கோவிலின் வெளிப்புறத் தோற்றத்தைப் பார்த்ததும் எண்பதுகளின் தமிழ் சினிமாக் கிராமம் நினைவுக்கு வருகிறது. கர்னாடக சங்கீதத்துக்கும் சென்னைக்குமான தொடர்பு சுமார் 250 ஆண்டுகளுக்கு முந்தையது என்றால் ஆச்சர்யமாக இல்லை? கோவூரின் சுந்தரேஸ்வர சுவாமி குறித்து கோவுர் பஞ்சரத்ன கீர்த்தனை இயற்றிப் பாடி இருக்கிறார் தியாகராசர். சிவன் மீது அவர் பாடிய இந்த கீர்த்தனை குறித்தும், சென்னையில் தியாகராசர் ஆறு மாதம் தங்கியது குறித்தும்வாலாஜாபேட்டை குறிப்புக்களில்எழுதப்பட்டிருக்கிறது. கொள்ளைக்காரர்கள் சிலரால் தாக்கப்பட்டு கோவூரில் தங்கியிருந்த தியாகராசரது கதை ஏழு அடுக்குக் கோபுரத்தில் காட்சிகளாக விரிகிறது



டாக்டர் பத்மா சுகவனத்தின் இனிய குரலில் சஹானாவிலும், சங்கராபரணத்திலும், தியாகராசர் அமர்ந்து பாடிய அதே இடத்தில் பஞ்சரத்தினக் கீர்த்தனையைக் கேட்ட அன்றைய அனுபவம்இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. கஜபிருஷ்ட வடிவ மூலவர் விமானம், உட்பிரகாரத்தில் காளிகாம்பாள், வீரபத்திரர், தொகை அடியார், சேக்கிழார் சிலைகள் அணிவகுக்கின்றன. கோஷ்டத்தில் ஒரே கல்லில் குடையப்பட்ட லிங்கோத்பவர் சிலை கவர்கிறது. “குலோத்துங்க சோழன் காலத்துக் கோவில் இது”, என வரும் போது வெங்கடேஷ் சொல்லகண்கள் விரிகிறது தானாக.
அடுத்த இடம் திருநீர்மலை. மலை என்றதும் பத்தடி பின்னால் நகர்ந்த என்னை இழுத்துக் கொண்டு தான் போனார்கள். ஐயோஉயரமென்றால் பயம், கால் வலி, என்ற எந்த சாக்கும் பலிக்கவில்லை. திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம் பாடல் பெற்ற கோவில் இது. அடையாற்றின் வெள்ளம் எத்தகையது என்பதை திருமங்கையாழ்வார் காலத்தில் அவரே பதிவு செய்திருக்கிறார். ஆறு மாதங்கள் காத்திருந்து வெள்ளம் வடிந்தபின் பார்த்த பெருமாளை நீர்வண்ணப் பெருமாள் என்றும், நீர்மலை என்றும் அழைக்கிறார். “நின்றான், நடந்தான், இருந்தான், கிடந்தான்என- நீர்வண்ணப் பெருமாள் கீழ்க்கோவிலிலும், உலகளந்தப் பெருமாள், சாந்த நரசிம்மர், இரங்கனாதப் பெருமாள் என மூன்று  கோலத்தில் மலை மேல் கோவிலிலும், ஆக மொத்தம் நான்கு கோலத்தில் பெருமாள் இருந்ததை பதிவு செய்கிறார். கீழ்க்கோவிலில் முதலாம் இராஜராஜனின் கல்வெட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இக்கோவில் இருந்திருக்க வேண்டும் என உறுதி செய்கிறது. வழக்கம் போல கல்வெட்டுக்களில் வெள்ளையும், கறுப்பும், காவியுமாய் நம் கைவண்ணத்தை நாமும் காட்டி இருக்கிறோம்



இங்கே இன்னொரு சிறப்பு, உர்ச்சவப் பெருமாள். இவர் அவர் இல்லை! இசுலாமிய படையெடுப்பின் போது, தற்போதைய பாரிசின் சென்னகேசவப்பெருமாள் கோவில் உர்ச்சவர் சிலைகள் இங்கே கொண்டுவரப்பட்டன எனவும், மீண்டும் எடுத்துச் செல்கையில், அவை இடம் மாறிய கதையும் நிலவுகிறது. மலைமேல் கல்கி மண்டபம் சதாசிவம், எம். எஸ் தம்பதியினரால் அன்பளிப்பாக கட்டித் தரப்பட்டிருக்கிறது. அவர்கள் திருமணம் இக்கோவிலில் தான் நடந்திருக்கிறது. மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி, எம். எஸ் என்ற உயர்ந்த பரிமாணம் பெற போடப்பட்ட முதல் வித்து இங்கே தான். மலைக்கு எதிரே ஒரு சிறு குன்றை முற்றிலுமாகக் குடைந்து கூடாக்கி இருந்தார்கள் கல்குவாரிக்காரர்கள். ஒரு வேளை திருமங்கைஆழ்வார் அங்கே நின்று நீர்வண்ணனை ஏக்கத்துடன் பார்த்திருக்கக்கூடும்.
அடுத்த இடம்- மணிமங்கலம். இந்தப் பயணத்தில் நான் மிகவும் எதிர்பார்த்திருந்த இடம். அடையாறு துவங்கும் இடம். நூறாண்டுகளுக்கு முன்னர் அடையாறின் பெயர்செங்கல்பட்டு நதி’- செங்கல்பட்டில் இருந்து வந்ததால்…! அடையாற்றின் கரையில் இரண்டு போர்கள் நடந்திருக்கின்றன- ஒன்று- பல்லவன் மகேந்திரவர்மனுக்கும், சாளுக்கிய இரண்டாம் புலிகேசிக்கும் இடையே மணிமங்கலத்தில் நடைபெற்ற போர்- இதில் விஷ அம்பு தாக்கி மகேந்திரவர்மன் இறந்ததையும், நரசிம்மவர்மன் இதற்குப் பழி வாங்க வாதாபியை வென்றதும் தான். கூரம் தகடுகளில் இந்தத் தகவல்கள் உள்ளன.  சிவகாமியின் சபதத்தின்கதைக்களம் இதுவே! இன்னொன்று- 1758ல் ப்ரெஞ்சுப் படைக்கும் ஆங்கிலேயருக்கும் பதினேழு மணிநேரம் மட்டுமே நீடித்த போர். அது நடந்தது பல்லாவரம் கேரிசன் தேவாலயத்தின் அருகில் இன்று உள்ள போலோ மைதானம்.
முதலில் சென்றது ராஜகோபாலசுவாமி கோவில். எழில் கொஞ்சும் தோற்றத்தில் பராமரிக்கப் பட்டிருக்கிறது கோவில். பலிபீடம், பித்தளையில் வேயப்பட்டக் கொடிமரம், அதில் தாடியுடன் கூடிய அழகிய ஆண்முகங்கள் தாண்டி மண்டபத்தை அணுகியதும் சுண்டி இழுத்தது- “ராஜஎன்ற எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டுக்கள். இராஜகேசரிவர்மன், இராஜாதிராஜன், இராஜேந்திரன், முதலாம் வீரராஜேந்திரன், முதலாம், மற்றும் இரண்டாம் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன், இரண்டாம் மற்றும் மூன்றாம் இராஜராஜன் என அத்தனை சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களும் கோவிலை சுற்றி ஆரவாரமின்றி ஆயிரம் ஆண்டு வரலாற்றை உள்ளடக்கி பெயின்ட் பூச்சுடன் பரிதாபமாக இருக்கின்றன. ஆசையுடன் விரல்களால் தொட்டு, கிரந்த எழுத்துக்களையும், வட்டெழுத்துக்களையும் படிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தோம். கோவில் பட்டர்களுக்கு குழிக்கணக்கில் நிலமும், நெல்லும் அன்பளிப்பாக பெருஞ்சோழர்கள் வழங்கியதையும், போர் வெற்றிகளையும் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன கல்வெட்டுக்கள்




பூதேவி, சீதேவி சமேத இராஜகோபாலசுவாமி இங்கே வித்தியாசமாக சங்கை வலப்புறத்திலும், சக்கரத்தை இடது கையிலும் மாற்றி வைத்திருக்கிறார். பிரகாரத்தில், விநாயகர், யோக நரசிம்மர், ஆதிஷேசன் குடைகீழ் நாராயணர், விஷ்ணு துர்க்கை என மிக அலங்காரமாக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இருக்கின்றன சிலைகள். பூதகணங்களில் கீதோபதேசம், அசோகவனத்து சீதை குடைந்திருக்கிறார்கள். மேலிருந்து வெளிச்சம் அழகாக சிறுதுவாரங்கள் வழியாக வருடுகிறது. இங்கும் கல்வெட்டுக்கள். மொபைல் வெளிச்சத்தில் கற்களைத் தடவிப் பெயர்களை வாசித்து குதூகலிக்கிறோம். பிற்கால சோழர்கள் கல்வெட்டுக்கள் இத்தனை இருக்கிறதே? முந்தைய பல்லவர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்விக்கு விடை அடுத்த நிறுத்தத்தில் கிடைத்தது.
1935ம் ஆண்டு கட்டப்பட்ட கிருஷ்ணர் பஜனை கோவிலின் முன் கொண்டு நிறுத்திய போது ஒன்றும் புரியவில்லை. வாசலில் நின்றன கனகம்பீரமாக- பல்லவர்களின் ஒரு ஜோடி சிங்கங்கள். நிச்சயம் மாமல்லனின் படைப்புகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற என் யூகம் சரிதான்! தலையில் கொம்புகள், சுருள் சுருளாக முடிக்கற்றைகள், வளைந்த சிங்கப்பற்கள், வட்ட வடிவ பத்மபீடம் என மாமல்லனின் காலத்து தம் கதையை சொல்கின்றன. இவை அருகில் உள்ள வைகுண்டப் பெருமாள் கோவிலைச் சார்ந்ததாக இருக்கலாம் என அங்கே நடந்தால்கண்ணில் நீர் வராத குறை. பல்லவ காலத்துப் பத்ம பீடங்களின் மேல் கான்கிரீட் பெஞ்சுகள்,   தரையில் அழுக்குடன் அழுக்காக சில தூண்கள், அவற்றில் பிராமி தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள், சிதிலம் அடைந்த நுழைவாயில், கல்வெட்டுக்களுக்குப் போட்டியாக குளியலறை டைல்கள்பேச்சே சிறிது நேரம் வரவில்லை. ஆயிரம் ஆண்டு கால வரலாறு குப்பையாக மக்கிக் கொண்டிருக்கிறது. மீண்டும் இராஜராஜனே வந்தாலும், அவனுக்கும் வெள்ளையடித்து அழகு பார்க்க நாம் தயாராய் இருக்கிறோம். பாதுகாக்கப் படாவிடில், இந்த பொக்கிஷங்கள் எதையும் நம் பிள்ளைகள் பார்க்கப் போவதில்லை.


மதிய உணவுக்கு ஒரு ம்யூசிக்கல் சேர் போட்டி நடத்தி, ஒருவழியாக உணவு முடித்து பல்லாவரம் வெட்டரன் லைன்களுக்கு சென்றோம். நூறாண்டுகள் பழைய வீடுகளில், ஒரு ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தை சந்தித்துப் பேசினோம். அதன் பின், ஆங்கிலேயப் படைகளுக்காக கட்டப்பட்ட கேரிசன் தேவாலயம். நூறண்டுகளுக்கும் பழைய இதில் உள்ள நான்கு அடுக்கு கோபுரம், மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்தின் போது இரண்டாக குறைக்கப்பட்டது. குண்டு துளைக்காத மேற்கூரை, பழங்காலத்து மெழுகுதிரி ஸ்டாண்டுகள், போரில் இறந்த படைவீரர்கள் நினைவாக வரைபட்டிகைகள் உள்ளன. அடுத்து சென்றது மெட்ராஸ் வேளாண்கல்லூரி இருந்த இடம்


1800-களில், சைதாப்பேட்டை முதல், இன்றைய மவுண்ட் ரோடு வரை விரிந்திருந்தது வேளாண் கல்லூரி. மல்பெரி, கோதுமை, கள்ளி, இண்டிகோ ஆகிவற்றை விளைவிக்க முயன்று வெற்றிகரமாக தோற்றதால், கல்லூரியை கோவைக்கு இடமாற்றம் செய்தனர். இன்று அவ்விடம் காஸ்மபோலிட்டன் கிளப்பின் கால்ஃப் கோர்ஸ். 1873ம் வருடம் அடையாற்றுடன் மாம்பலம் கால்வாய் சேருமிடத்தில் துவங்கப்பட்ட இந்த கிளப்பின் திருவிதாங்கூர் பவிலியன், சர் சிபி இராமசுவாமி உதவியால் 1938ல் கட்டப்பட்டது. காஃபியை பருகிவிட்டுக் கிளம்பும் நேரம் அடையாற்றின் கரையில் ஒரு நிமிடம் நின்றோம். மனம் கனத்தது. வெறும் குப்பை மிதக்கும் சாக்கடையாக ஒரு பண்பாட்டின் தொட்டிலான நதியைத் தொலைத்துவிட்டு, நாம் சாதிக்கப் போவது தான் என்ன?

No comments:

Post a Comment

Hey, just let me know your feedback:)