அவள் விகடன், 18.04.17
ஒரு நடுமதிய வேளையில், “தமிழ் மணத்தின்” கூடத்தில்
அமர்ந்து காலாட்டியபடி, இவர் வைத்திருக்கும் குடுவைகளில் உணவு அருந்த வரும் அணில்களை
நாங்கள் இருவரும் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் போது தோன்றியது- “இன்னும்
பத்து வருடங்களில் என் மகள் இவளைப் போன்று தான் இருக்க வேண்டும்”. சுந்தரி. புத்தகங்களின்
காதலி. கட்டிடக்கலை இவரது தொழில். இவர் வயதுப்
பெண்கள் ஆடல், பாடல், கைவினைப் பொருட்கள் என ஆரவாரத்துடன் செய்யும் போது, அமர்த்தலாக
இவர் செய்திருக்கும் விஷயங்கள்- அண்ணாநகர் மரபு நடைகள், மரபுநடைப்
புத்தகங்கள் வெளியிட்டது, தன்னார்வப் பணி, குழந்தைகளுக்கு
வாரம் ஒரு நாள் கதை சொல்லுதல், எல்லாவற்றையும் விட சிறப்பானது, 74000 புத்தகங்கள்
கொண்ட மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டியின் பொறுப்பாளர்களில் இவரும் ஒருவர். இனி அவருடன்-
1. உங்கள்
இளமைப் பருவம். பிறந்தது, வளர்ந்தது பற்றி…?
பிறந்தது பாண்டிச்சேரி. சொந்த ஊர்- கூவம் அருகே
கீழச்சேரி. பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. படிப்பதற்காக
கொள்ளுத் தாத்தா கீழச்சேரி இராமலிங்கனார் சென்னை வந்தார். இங்கேயே
அரசு வேலை கிடைக்கவும், தங்கிவிட்டார். அலுவலகத் தமிழ்
மொழிபெயர்ப்பு, தமிழ் நிர்வாக அகராதி மாற்றம் என தமிழ்ப் பணிகள் செய்தார். “பேருந்து”,
“மகிழுந்து”, “ஆளுனர்”, “நடத்துனர்”, “ஓட்டுனர்” போன்ற சொற்களை
தமிழுக்குத் தந்தவர் அவர். அவர் எழுதிய “என் வரலாறு” என்ற புத்தகம்
என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது.
இதைத் தான் செய்ய வேண்டும் என யாரும்
யாரையும் எங்கள் குடும்பத்தில் வற்புறுத்துவதில்லை. அவரவர்
வழி தனி. தாத்தா நீர் பரிசோதனை, மைனிங்
என்று அவருக்குப் பிடித்ததை செய்தார். அப்பா தொழிலதிபர். நான் கட்டிட
வடிவமைப்புத் துறையைத் தேர்ந்தெடுத்த போது, ஏற்றுக்
கொண்டார்கள். தங்கை பத்தாம் வகுப்பு படிக்கிறார். ஆனால் அவருக்கும்
எந்த அழுத்தமும் இல்லை. எதையும் படிக்கலாம், ஆனால் பணமோ, ரெக்கமெண்டேஷனோ
கொடுத்து படிக்கக் கூடாது. மெரிட்டில் தான் படிப்பு என்பதில் குடும்பத்தினர் உறுதியாய்
இருக்கிறார்கள்.
பன்னிரெண்டாம் வகுப்பு வரை அண்ணா ஆதர்ஷில்
படித்தேன். அங்குள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். மேடை பயம்
இல்லாமல் பேசவும், என் குரலுக்கு வில்லுப்பாட்டு நன்றாக வரும் என்று சொல்லியும்
ஊக்கப் படுத்தியது அவர்கள் தான். ஒரு பஞ்சாபி பள்ளியில் தமிழ் சங்கம் ஒன்றை நாங்கள் துவக்கக்
காரணமும் அவர்கள் தான். வீடு, பள்ளி, கல்லூரி என எல்லா இடங்களிலும் அழுத்தம் இல்லாததே, நாங்கள்
தனித்துவமாக விளங்க உதவியது.
2. கட்டிட
வடிவமைப்பு மேல் ஆர்வம் எப்படி வந்தது? எங்கு படித்தீர்கள்?
தாத்தா ஒரு சிவில் எஞ்சினியர். நிறைய வரைபடங்கள்
வைத்திருப்பார். ஐரோப்பாவின் வரைபடத்தில் நீட்டிய கை போல் இருப்பது இத்தாலி, அதன் கீழ்
தூவிய பொரி போல் இருப்பது மால்ட்டா, அதன் நடுவே நகை
போலத் தெரிவது ஜெர்மனி என்று சொல்வார். ஜெர்மனியில் அவர்
படித்ததால், அங்குள்ளக் கட்டிடங்களுக்கு அவற்றின் தொன்மையைக் குறிப்பிடும்
எண் உண்டு. அவை பாதுகாக்கப் பட்டவை என்று சொல்வார். கட்டிடக்
கலை என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் கட்டிடங்கள், புராதன
சின்னங்கள் என்பது சிறு வயதிலேயே தாத்தாவின் மூலம் மனதில் நின்று விட்டது.
எஸ்.ஆர்.எம்.மில் இளங்கலை
கட்டிட வடிவமைப்பு சேர்ந்தேன். அப்போது, அங்கு மட்டுமே ஒரு
வருடமோ/ஒரு செமஸ்டரோ வெளிநாட்டில் தங்கிப் படிக்க மாணவர் பரிமாற்றத்
திட்டம் இருந்தது. மூன்றாம் ஆண்டில் இங்கிலாந்தின் பிரிமிங்ஹாம் கல்லூரியில்
படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உலகப் பிரசித்தி பெற்ற கட்டிட வடிவமைப்பாளர் லாரி பேக்கர்
படித்தக் கல்லூரி அது! இங்கிலாந்தையும், அதன் கட்டிடங்களையும்
சுற்றிப் பார்த்தேன்.
அப்போது தான் கட்டிட பாதுகாப்பு என்பது
இல்லாமல், திட்டமிடல் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பு படிக்க வேண்டும்
என்ற ஆசை வந்தது. பாரம்பரிய ஆலோசகர் என்றே நான் என்னை அடையாளப் படுத்திக் கொள்ள
விரும்புகிறேன். கட்டிட வடிவமைப்பு என்பதைத் தாண்டிய அடையாளம் அது. “என் வீட்டில்
பழைய ரெட் ஆக்சைடு தரை சிதிலமாகி இருக்கிறது, அதை எப்படி
சரி செய்யலாம்?”, “என் அம்மாவின் பழைய பட்டுப் புடவை ஒன்று இருக்கிறது. அதை சரி
செய்ய முடியுமா?”, “எனக்கு வயது 75. என் முன்னாள் காதலன்
கையெழுத்திட்ட பழைய புத்தகம் ஒன்று என்னிடம் இருக்கிறது, அதை பத்திரப்
படுத்த முடியுமா?” போன்ற கேள்விகளை சந்திக்கும் போது, அவற்றை
என்னால் உணர்வுப்பூர்வமாக அணுக முடிகிறது. இவை தவிர
அப்பார்ட்மென்டுகள், தனி வீடுகள் வடிவமைப்பு என இன்னொருபுறம் வழக்கமான வேலைகளும்
செய்து கொண்டிருக்கிறேன்.
3. வெளிநாடுகளில்
நீங்கள் சந்தித்த வித்தியாசமான அனுபவங்கள் பற்றி சொல்லுங்களேன்?
பிரிமிங்ஹாமில் ஆறு மாதங்கள், ஃப்ரான்ஸில்
ஒரு ஆண்டு. நிறைய மனிதர்களை சந்தித்து இருக்கிறேன். பார்க்கும்
அனைவரிடமும் இந்தியா, சென்னை பற்றியே பேசுவேன். நம் ஊர்
குறித்து அவர்களுக்கு ஒரு கைடு புக் நாலேஜ் மட்டுமே உண்டு. எனக்கு
பகிர்தல் மிகவும் பிடிக்கும். பிறரிடம் பகிர்வதால் தான் அறிவுக்கு மதிப்பு. அவர்களிடம்
கற்றுக் கொள்ள நமக்கும், நம்மிடம் கற்க அவர்களுக்கும் நிறைய விஷயங்கள் உண்டு. ஒரே ஒரு
விஷயம் தான்- யாரையும் மதிப்பிடல் வேண்டாம். யாருக்கும்
சாயம் பூச வேண்டாம். மேல் பூச்சுத் தேவை இல்லை. பாரதியாரையே
வழவழவென சவரம் செய்து அழகு பார்த்த ஆட்கள் நாம். அவரது சிறப்பே
அவரது முரட்டுத் தாடி மண்டிய முகம் தான்!
4. இந்தியா
திரும்பியதும் என்ன செய்ய நினைத்தீர்கள்? என்ன செய்தீர்கள்?
அங்கேயே பிஹெச்டி படிக்க வாய்ப்பு வந்த்து. ஆனால் எனக்கு
ஊருக்குத் திரும்பவே ஆசை. ஆர்கிடெக்ட் கல்பனாவிடம் பணியில் சேர்ந்தேன். கட்டிடப்
பாதுகாப்பின் மீது ஆர்வம் அவரை சந்தித்த பின்பே வந்தது. நான்கு
மேசை, சில சதுர அடிகள் அறை, ஏசி ரூம், என்ற ஆசைகள்
எனக்கு இல்லை. தோழிகள் சிலர் ஒன்றிணைந்து “ஸ்டுடியோ
காங்கிளேவ்” என்ற கோ-வர்க்கிங் ஆஃபிஸ்,
2013ம் ஆண்டு முதலே நடத்தி வருகிறோம். என் அலுவலகத்துக்கு
யார் வேண்டுமானாலும் வரலாம், பணி செய்யலாம் என்ற நிலை இருக்கும். இதனோடு
கூடவே 23 வயதில் இறந்து போன என் அத்தையின் ஞாபகமாக அவர் பெயரில் “எழில்” என்ற தன்னார்வ
சமூகப் பணிக்குழுவையும் ஆரம்பித்தோம்.
ஃபர்ன் ஆர்ட் ஸ்டுடியோ மூலம் நலிவடைந்த
கைவினைக் கலைஞர்களிடம் பொருட்கள் வாங்கி, ஆன்லைனில் லாப நோக்கம்
இல்லாமல் விற்கிறோம். இது தவிர “நம் வீடு, நம் ஊர், நம் கதை” என்பது
நம் பாரம்பரியத்தை சார்ந்த பணிகளுக்கு நான் இட்டுள்ள பெயர். இந்தப்
பணிகளுக்குத் தானாகவே முன்வந்து நட்புகள் உதவுகிறார்கள்.
5. தன்னார்வப்
பணி எப்பொழுது துவங்கியது?
கல்லூரி நாட்களில்…2011ல் திருவல்லிக்கேணிப்
பகுதியில் தான் என் முதல் மரபு நடை. பெரும்பாலும் என்
நடைகள் மக்களின் வாழ்வியல் சொல்வதாகவே அமைந்தன. அதன் பின்
அறுவை சிகிச்சை, மேற்படிப்புக்கு உதவி என்று என் பார்வை விரிவடைந்தது. இயற்கை
என்னை கொண்டு செல்லும் பெரிய உந்து சக்தி என நினைக்கிறேன்.
6. மெட்ராஸ்
இலக்கியக் கழகம். இங்கு எப்பொழுது வந்தீர்கள்? இதன் மீதான
ஆர்வம் எப்படி வந்தது? புத்தகங்களை எப்படிப் பாதுகாக்கிறீர்கள்?
2009ல் முதன்முதலில்
நான் இங்கு வந்தேன். நூலகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடிப் போனேன். இந்தக்
கட்டிடம் இந்தோ சாரசனிக் பாணியில், நூலகத்துக்கெனவே
வடிவமைத்துக் கட்டப்பட்டது. 1812ல் நிறுவப்பட்ட மெட்ராஸ் இலக்கியக் கழகம்,
1906ம் ஆண்டு டிபிஐ வளாகத்தில் திறக்கப்பட்டது. மெட்ராஸ்
லிட்டரரி சொசைட்டியின் செயற்குழுவில் இப்போது என் போன்ற ஆர்வலர்களும், ஓய்வு பெற்ற
குடிமைப் பணி மற்றும் கடற்படை அதிகாரிகளும் என 8 தன்னார்வ, கவுரவ உறுப்பினர்கள்
இருக்கிறோம்.
இங்கிருக்கும் புத்தகங்களில் பல நூற்றாண்டு
கண்டவை. இவற்றை தினசரி பேண வேண்டும், நம் வீடுகள்
போல. 74000 புத்தகங்களை தூசு தட்டி வைப்பது சுலபம் இல்லையே? காகிதங்களின்
அமிலத்தன்மை, காரத்தன்மையை சோதித்துப் பார்த்து, பழைய புத்தகங்களைப்
பழுப்பு வண்ணத்தில் இருந்து தெளிவான வண்ணத்துக்கு டி-அசிடிஃபிகேஷன், ஃப்யூமிகேஷன்
செய்து, மக்காத ஃபோட்டோலாம் ஷீட்களில் அவற்றைப் பொருத்த வேண்டும். நம் பாரம்பரியப் பொருட்களான கடுக்காய்ப் பொடி, பட்டைப்
பொடி கொண்டு புத்தகங்களைப் பாதுகாக்கிறோம்.
7. தற்போது
எத்தனை உறுப்பினர்கள் எம்.எல்.எஸ்ஸில் இருக்கிறார்கள்?
ஒரு காலத்தில்
600 பேர் இங்கு உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். இப்போது
300 பேர் இருக்கிறார்கள். வாசிப்பு அருகிவிட்டது என்பது உண்மை தான். இங்கு உறுப்பினராவது
சுலபம். முதல் ஆண்டு சந்தா 900 ரூபாய்
செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு முதல் 850 ரூ மட்டுமே. மாதம் நான்கு
புத்தகங்கள் எடுத்துக் கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் இங்கே வரலாம், இங்கேயே
அமர்ந்து, இந்த ரம்மியமான சூழலில் புத்தகங்களைப் படிக்கலாம்.
8. இங்கு புத்தகம்
தத்து எடுப்பது பற்றிச் சொல்லுங்கள்…
எங்களிடம் உள்ள, உங்களுக்குப்
பிடித்தப் பழைய புத்தகம் ஒன்றை நீங்கள் பாதுகாக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்
கொள்வோம், அந்தப் புத்தகத்தை மீட்க ஆகும் செலவை கணக்கிட்டுக் கூறுவோம். அதை நீங்கள்
ஏற்றுக் கொண்டால், முன் அட்டையில் உங்கள் பெயரை அச்சிடுவோம். உறுப்பினர்கள், புரவலர்கள்
உதவியுடன் புத்தகங்களின் ஆயுளை நீட்டிக்கிறோம்.
9. இங்கு உள்ள
புத்தகங்களில் பழமையானவை எவை?
அரிஸ்டாட்டிலின்
1619ம் வருடத்தைய புத்தகம், நியூட்டனின் 1726ம் ஆண்டுப் புத்தகம், அன்னி பெசன்ட்டால்
எம் எல் எஸ்ஸுக்கு 1919ம் ஆண்டு எழுதப்பட்டக் கடிதம், சுபாஷ் சந்திர போஸ் 1935ம் ஆண்டு
அனுப்பியக் கடிதம், பழைய கம்பராமாயணம் கையெழுத்துப் பிரதி, என்று ஒரு
பெரும் புதையலே இங்கு இருக்கிறது. போஸின் கடிதம் மேஜை மேல் இருந்தால், அவரே எனக்கு
எழுதியதாக உணர்கிறேன். இந்தப் புதையலில், நாம் தேடி
எடுக்கக் காத்திருக்கின்றன- புத்தகங்கள்!
10. இது வரை
நீங்கள் சந்தித்ததிலேயே பெரிய சவால் எது?
மூன்று கேள்விகள்/அளவீடுகளுக்கு
உள்ளாகும் போது ஒரு பெண்ணாய் எனக்குக் கோபம் வருகிறது. “ஓ..பொண்ணா?”,
“இவ்வளவு வயது தானா?”, “புடவை கட்டி, நகை அணிந்து சென்றால்
தான், அமைதியான அடக்கமான பெண்”- இது போன்ற
அளவீடுகள் எரிச்சலைத் தருகின்றன. என்னை மதிப்பிட வேண்டாம். நான் என்ன
என்பது எனக்குத் தெரியும். எனக்கான வெளியை என்னிடம் விட்டு விடுங்கள்.
11. வெளிநாட்டுப்
பெண்களுக்கும், நம் பெண்களுக்கும் என்ன வேறுபாடுகள் காண்கிறீர்கள்?
ஒரே ஒரு விஷயம் தான்- வெளிநாட்டுப்
பெண்கள் செய்வதற்கு முன்னோ, பின்னோ எதையும் யோசிப்பதில்லை. ஆனால் நம்
பெண்கள் நடந்து முடிந்தவற்றைப் புலம்பியேத் தவிக்கின்றனர். “அடடா…இதை செய்யாமல்
விட்டு விட்டோமே” என்ற வருத்தம் மட்டும் பெண்களுக்கு இருக்கவேக் கூடாது. ஒரு பாதுகாப்பு
உணர்வோடு, கவனமாக இருக்கிறோம் என்று இல்லாமல், இப்படி
யோசிக்க பழக்கப் படுத்தப் பட்டிருக்கிறோம் என்பதே என் கணிப்பு.
12. பெண்கள்
எதை விட்டு வெளிவரவேண்டும் என நினைக்கிறீர்கள்?
நான் யாரைப் பார்த்தாலும், அவர்களைப்
பாராட்ட நினைப்பவள். சென்று கொண்டிருக்கும் காரை நிறுத்திக் கூட “நீங்கள்
அழகாக இருக்கிறீர்கள்”, “உங்கள் பணி மகத்தானது” என்று சொல்லிவிடுவேன். உங்களைச்
சுற்றி இருப்பவர்களை அங்கீகரிப்பதே மிகவும் சிறந்த பணி. அதை செய்யத்
தவற வேண்டாம் என்பது தான் பெண்களுக்கு நான் சொல்ல விரும்பும் செய்தி.
13. உங்கள்
கனவுகள்…அடுத்து என்ன செய்ய ஆசைப்படுகிறீர்கள்?
பெரிதாக எதுவும் இல்லை. இப்போது
செய்வதையேத் தொடர விரும்புகிறேன். செய்வது எதுவாயினும், பேருவகையுடன்
செய்யவே ஆசைப்படுகிறேன். “ஐயோ..இதை இன்று செய்ய வேண்டுமே…?” என்ற வருத்தத்துடன்
ஒரு நாளும் நான் எழப் போவதில்லை. “பேருவகையுடன் வாழ வேண்டும்”. அவ்வளவே.
பேருவகையுடன், வெற்றிமாலை
சூடி வாழ வாழ்த்துக்கள் பெண்ணே!
No comments:
Post a Comment
Hey, just let me know your feedback:)